தமிழ்நாடு

tamil nadu

கைதான ராக்கெட் ராஜா கோவை சிறைக்கு மாற்றம்

By

Published : Oct 7, 2022, 8:00 PM IST

Updated : Oct 8, 2022, 8:01 AM IST

ரவுடியாக இருந்து பின் பனங்காட்டுப்படை எனும் கட்சி தொடங்கி, அதன் தலைவராக இருந்த ராக்கெட் ராஜாவை, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒரு கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர். அதன் பின்னணி தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

வீட்டில் இருந்த ராக்கெட் லாஞ்சர், ஏகே 47 துப்பாக்கி; கைதான ராக்கெட் ராஜா குறித்த தகவல்கள்...
வீட்டில் இருந்த ராக்கெட் லாஞ்சர், ஏகே 47 துப்பாக்கி; கைதான ராக்கெட் ராஜா குறித்த தகவல்கள்...

திருநெல்வேலி:நாங்குநேரியைச்சேர்ந்த சாமிதுரை (26) என்பவர், கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி சந்தேகத்திற்குரிய நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சாமிதுரை கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, தென்தமிழ்நாட்டைச்சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா இன்று கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாமிதுரை தரப்பிற்கும் ராக்கெட் ராஜா தரப்பிற்கும் இடையே சாதி ரீதியாக, பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று ராக்கெட் ராஜா திட்டப்படி, சாமிதுரை கொலை செய்யப்பட்டுள்ளார்.

ராக்கெட் ராஜா

எனவே, இந்த வழக்கில் கடந்த பல நாட்களாக நெல்லை மாவட்ட காவல்துறையினர் ராக்கெட் ராஜாவை தீவிரமாகத் தேடி வந்துள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்து அவரும் பதுங்கியுள்ளார். இந்த நிலையில் இன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நாங்குநேரி டிஎஸ்பி சதுர்வேதி தலைமையிலான நெல்லை தனிப்படை போலீசார், ராக்கெட் ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

ராக்கெட் ராஜா

அவர் வெளிநாடு தப்பி செல்ல இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். ராக்கெட் ராஜா மீது ஐந்து கொலை வழக்குகள், உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு காலத்தில் ரவுடிகள் சாம்ராஜ்ஜியத்தில் கொடி கட்டிப் பறந்தவர்.

ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடாருக்காக வாங்கு சேகரித்த ராக்கெட் ராஜா

இவருக்குச்சொந்த ஊர் நெல்லை மாவட்டம், திசையன்விளை அடுத்த ஆனைக்குடி. 1990 கால கட்டங்களில் சாதி ரீதியான சண்டைகள், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி எனப்பல்வேறு சம்பவங்களில் ராக்கெட் ராஜா ஈடுபட்டு வந்தார். நாடார் சமுதாயத்தின் முக்கியத்தலைவராக அறியப்படும் கராத்தே செல்வினின் சீடராக இருந்தார். பின்னாளில் வெங்கடேஷ் பண்ணையாரின் வலதுகரமாக செயல்பட்டுவந்தார்.

ராக்கெட் ராஜா

பின்னர் அவரது மறைவுக்குப்பிறகு, சுபாஷ் பண்ணையாருடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக, தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச்சேர்ந்த பசுபதி பாண்டியன் கொலை வழக்கு, பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கு எனப்பல்வேறு கொலை வழக்குகளில் சந்தேகிக்கப்பட்ட, மாநில அளவிலான ரவுடிகள் பட்டியலில் முக்கிய இடம் பெற்றிருந்தார்.

இவரது வீட்டில் ராக்கெட் லாஞ்சர், ஏகே 47 துப்பாக்கிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஸ்கெட்ச் போடுவதில் தொடங்கி, செயலை முடிப்பது வரை ராக்கெட் வேகத்தில் செயல்படுவதால் இவரை ராக்கெட் ராஜா என்று அடைமொழியுடன் அழைத்துவந்தனர். இப்போதுள்ள இளைஞர்களுக்கு ராக்கெட் ராஜா பற்றி பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், 90’s கிட்ஸ் இளைஞர்கள் ராக்கெட் ராஜாவை நன்கு அறிந்திருப்பார்கள்.

90-களின் கால கட்டங்களில் காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். 2017ஆம் ஆண்டு காவல்துறை தன்னை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்ல திட்டமிட்டிருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தினார்.

இதுபோன்று பிரபல ரவுடியாக வலம் வந்த ராக்கெட் ராஜா சமீப காலமாக அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார். ஏற்கெனவே நாடார் மக்கள் சக்தி என்ற அமைப்பைத் தொடங்கியவர், பின்னாளில் பனங்காட்டுப் படை கட்சி என்ற கட்சியைத் தொடங்கி அதன் நிறுவனத்தலைவராக செயல்பட்டு வருகிறார்.

மேலும் தற்போது கர்நாடக சிறையில் இருக்கும் பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாருடன் இணைந்து 2021 சட்டப்பேரவைத்தேர்தலில் ஆலங்குளம் பகுதியில் ஹரி நாடாருக்காக பரப்புரை செய்ய ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க செய்தார்.

குறிப்பிட்ட சமுதாயத்தின் தலைவராக பார்க்கப்பட்ட ராக்கெட் ராஜா நேரடியாக களத்தில் வந்து பிரசாரம் செய்த காரணத்தால், அத்தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் ஹரிநாடார் சுமார் 30,000 வாக்குகள் பெற்று திமுகவின் முக்கிய புள்ளியான பூங்கோதை ஆலடி அருணா தோற்க காரணமாக இருந்தார்.

ஆனால், தேர்தலுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. மோசடி வழக்கில் ஹரிநாடார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து ராக்கெட் ராஜா மீது சிறையில் இருந்தபடி ஹரி நாடார் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். இதுபோன்ற நிலையில் ராக்கெட் ராஜா, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா கைது

Last Updated : Oct 8, 2022, 8:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details