தமிழ்நாடு

tamil nadu

ஈரோட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய நெல்லை போலீசார்.. 5 பேர் கைதானதன் பின்னணி என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 1:16 PM IST

Updated : Jan 5, 2024, 1:50 PM IST

Police gun shoot at erode: ஈரோடு பெருந்துறை அருகே ரவுடி கும்பலை பிடிக்க நெல்லை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்துறை அருகே கொலை குற்றவாளியை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு
பெருந்துறை அருகே கொலை குற்றவாளியை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு

திருநெல்வேலி: ஈரோடு அருகே கொலை குற்றம் சாட்டப்பட்ட நபரைப் பிடிக்கச் சென்ற நெல்லை போலீசாரை, அரிவாளால் தாக்கி தப்ப முயன்ற ரவுடி கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர் சிவா என்ற சுப்ரமணியன். இவர் மீது கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல் உள்பட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. திருச்சி, உறையூரில் நடைபெற்ற கொலை வழக்கில் சுப்பிரமணியன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், மேலகாடுவெட்டியில் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று இசக்கி பாண்டியன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியான சுப்பிரமணியனை கைது செய்ய நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கண்காணிப்பில், உதவி ஆய்வாளர் ஆண்ட்ரோ பிரதீப் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், நெல்லை மாவட்ட பகுதியில் கொலை உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய சிவசுப்ரமணியம், தனது கூட்டாளிகளுடன் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே குள்ளம்பாளையம் பகுதியில் வீட்டில் பதுங்கி இருப்பதாக, நெல்லை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், நெல்லை காவல் உதவி ஆய்வாளர் ஆண்ட்ரோ பிரதீப் தலைமையில், ஆறு பேர் கொண்ட தனிப்படை போலீசார் நேற்று (ஜன.4) ரவுடிகள் தங்கி இருந்த வீட்டைச் சுற்றி வளைத்துள்ளனர். இதனையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க முற்பட்டபோது அவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் போலீசாரை தாக்க முற்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார், தாங்கள் வைத்து இருந்த துப்பாக்கியால் சுவற்றினை நோக்கி சுடத் தொடங்கியுள்ளனர். இதில், அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர், போலீசாரை தள்ளிவிட்டு ரவுடிகள் அனைவரும் அங்கிருந்து சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை துரத்திய போலீசார், சிவசுப்பிரமணியன் மற்றும் அவரது கூட்டாளிகளான சூர்யா, வசந்தகுமார், இசக்கி பாண்டி, முத்து மணிகண்டன் ஆகிய ஐந்து பேரையும் போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நெல்லை அழைத்து வரப்பட்ட நிலையில், மீண்டும் போலீசாரிடம் இருந்து சுப்பிரமணியன் மற்றும் முத்து மணிகண்டன் ஆகிய இருவரும் தப்ப முயன்றுள்ளனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், இவர்கள் இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மூன்று பேரையும் களக்காடு காவல் நிலையத்தில் வைத்து, தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரவுடியைப் பிடிக்கச் சென்ற போலீசாரை, ரவுடிகள் ஆயுதத்தால் தாக்க முயன்றதும், அவர்களை துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்த சம்பவமும் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு டெண்டரில் மோசடி; அமைச்சர்கள் மீது சவுக்கு சங்கர் புகார்!

Last Updated : Jan 5, 2024, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details