தமிழ்நாடு

tamil nadu

நெல்லையில் பெட்ரோல் குண்டுகளுடன் காரில் வலம் வந்த முக்கிய பிரமுகர் கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 7:48 AM IST

Nellai rowdy arrest: திருநெல்வேலியில் சட்டவிரோதமாக காரில் அரிவாள்கள், பெட்ரோல் குண்டுகள், ஆயுதங்களுடன் வலம் வந்த தேவேந்திர குல அமைப்பின் தலைவர் மற்றும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் குண்டுகளுடன் காரில் வலம் வந்த பிரபல சமுதாய தலைவர் நெல்லையில் கைது
பெட்ரோல் குண்டுகளுடன் காரில் வலம் வந்த பிரபல சமுதாய தலைவர் நெல்லையில் கைது

திருநெல்வேலி: தச்சநல்லூர் பகுதியில் வசித்து வருபவர், கண்ணபிரான். இவர் தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவராக பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் (நவ.13) தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மணி என்பவர், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அவரது வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற கண்ணபிரான், கொலை செய்யப்பட்ட மணி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு, நேற்று மாலை நெல்லை திரும்பும்போது நெல்லை மாநகர எல்லையான கேடிசி நகர் சோதனைச் சாவடியில் அவரும், அவரது ஆதரவாளர்கள் வந்த இரண்டு வாகனங்களையும் காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர்.

சோதனையில், 5 அரிவாள்கள், ஆறு பெட்ரோல் குண்டுகள், குண்டுகள் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து, இரண்டு வாகனங்களில் வந்த கண்ணபிரான் உள்ளிட்ட 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், நெல்லை மாநகர் பாளையங்கோட்டை மற்றும் மகாராஜ நகர் காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக பெட்ரோல் மற்றும் அரிவாள்களை காரில் வைத்திருந்த 16 நபரிடமும் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடைய, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கண்ணபிரான் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக கலவரம் ஏற்படும் என பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வந்துள்ளது.

இதனை அடுத்து, கண்ணபிரான் மீது மாநகர குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவம் குறித்தும் கண்ணபிரானிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்கள் எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தார்கள், வேறு ஏதேனும் சதி செயல்களில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கண்ணபிரான் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அரசுப் பள்ளி வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு.. புதுக்கோட்டையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details