தமிழ்நாடு

tamil nadu

"திருச்சியை 2வது தலைநகராக்குங்கள்" - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 6:56 PM IST

தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக திருச்சியை கொண்டு வர வேண்டும். திருச்சியை இரண்டாவது தலைநகரமாக மாற்றினால் போக்குவரத்துக்கு உதவியாக இருக்கும் என நெல்லையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்

எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்
எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்

எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 141வது பிறந்த தின விழாவையொட்டி நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள பாரதியார் திருவுருவச் சிலைக்கு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இயற்கை சீற்றத்தை அரசியல் ஆக்க கூடாது என அமைச்சர்கள் கூறியுள்ளனர். எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மழை பாதிப்பை அரசு கவனக்குறைவாக கையாண்டுள்ளனர். தமிழ்நாடு அரசு புயல் நிவாரணமாக 6000 ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளது. அது போதாது 12000 வழங்க வேண்டும்.

இதனைதொடர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கூறினார். டெல்லியில் இருக்கக்கூடிய நாடாளுமன்றக் குழு பேசி முடிவு எடுப்பார்கள். பாஜக தமிழ்நாட்டில் பெரும்பான்மையான வெற்றியை பெரும். பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. தண்ணீர் தேங்கியுள்ள மாநகராட்சியை தொடர்பு கொண்டு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக திருச்சியை அமைக்க வேண்டும் என புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அறிவித்தார். அப்போது கலைஞர் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். புரட்சித் தலைவர் கொண்டுவரும் எல்லா நல்ல திட்டங்களுக்கும் கலைஞர் எதிர்ப்பு தெரிவித்தார். திருச்சியை இரண்டாவது தலைநகரமாக மாற்றினால் போக்குவரத்துக்கு உதவியாக இருக்கும் என்றார்.

பெருவெள்ளம் போன்ற வெள்ள பிரச்சனை இருந்து மக்கள் பாதுகாக்கப்படுவார்கள். கன்னியாகுமரி, கோவை ஆகிய பகுதிகளிலிருந்து திருச்சிக்கு நான்கு மணி நேரத்தில் வர முடியும். திருச்சியை இரண்டாவது தலைநகராக கொண்டு வருவது நல்ல விஷயம் தான். வடமாநிலங்களில் முதலமைச்சரை தேர்வு செய்யும் விவகாரத்தில் பார்லிமென்ட் குழு முடிவு செய்யும். முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி இல்லை என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ”ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்வது தொடர்பாக மேல்முறையீடு வழக்குகளில் நீதிபதிகள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். 370 சட்டப்பிரிவு தற்காலிகமான ஒன்றுதான் என்பதை குறிப்பிட்டு தலைமை நீதிபதி சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது. மாநில மக்களுக்கு சாதகமாக நல்ல பலன்களை செய்கின்ற வகையில் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

ஜனாதிபதி ஆட்சி குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றங்களுக்கு அதன் மீது எந்த பிரச்சனையும் இல்லை என்ற கருத்தை நீதிபதிகள் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது. இந்தியாவில் உள்ள அனைத்து குடிமகனுக்கும் அனைத்து சட்டமும் ஒன்று. ஆனால் காஷ்மீர் மாநிலத்தில் சொத்து வாங்க முடியாது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தது.

அதனால் தான் மத்திய அரசு, இந்த விவகாரத்தில் எடுத்த முடிவு சரியானது என நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஜம்மு காஷ்மீரிலும், இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் ஒரு சிலரை தவிர பெரும்பாலான மக்கள் சட்டப்பிரிவு 370 நீக்கியதை வரவேற்கிறார்கள். சட்டப்பிரிவு 370 விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெல்லை எம்பி தொகுதியில் பாஜக கூட்டணியில் சரத்குமார் போட்டியா? - சூசக பேச்சின் ரகசியம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details