தமிழ்நாடு

tamil nadu

ஹரி நாடார் மீது மனைவி பரபரப்பு புகார்!

By

Published : Jan 22, 2022, 9:19 PM IST

விவகாரத்துக்கு சம்மதிக்காததால் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்து வரும் மஞ்சு மற்றும் தனது கணவர் ஹரி நாடார் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திருநெல்வேலி எஸ்பியிடம் ஹரி நாடாரின் மனைவி ஷாலினி பரபரப்பு புகார் அளித்தார்.

ஹரி நாடார் மீது மனைவி பரபரப்பு புகார்
ஹரி நாடார் மீது மனைவி பரபரப்பு புகார்

திருநெல்வேலி: நடமாடும் தங்க நகை கடை போல் வலம் வந்தவர் ஹரிநாடார். திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தை குளத்தை சேர்ந்த இவர், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு, அதில் 37 ஆயிரம் வாக்குகளைப் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

தேர்தல் முடிந்த கையோடு பணமோசடி வழக்கு ஒன்றில் கைதாகி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமியை மிரட்டிய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஹரி நாடாரின் மனைவி ஷாலினி தனது மகனுடன் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், "ஹரி நாடார் என்னை கடந்த 5-12-2011 அன்று காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்யும்போது இருவருக்கும் வசதி கிடையாது. தற்போது அக்ஷய் என்ற 11 வயது மகன் உள்ளான். மகன் பிறந்த பிறகும், சமுதாய கட்சியில் சேர்ந்த பிறகும் பைனான்ஸ் பழக்கவழக்கங்களால் வசதி வாய்ப்பு கூடியது.

ஹரி நாடார் மீது மனைவி பரபரப்பு புகார்

மலேசியா பெண் கொலை மிரட்டல்

அதன் பின்பு அவரது நடவடிக்கைகள் மாறத் தொடங்கின. முதலில் என் குழந்தை மற்றும் என்மீது பாசமாக இருந்த ஹரிநாடார் பணம் வந்தபிறகு அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக எனக்கும் பணம் தருவதில்லை, மகன் படிப்பிற்கும் பணம் கொடுக்கவில்லை.

இதனால் மிகுந்த கஷ்டத்தில் இருந்து வருகிறேன். இந்தநிலையில் ஹரி நாடார் என்னை விவாகரத்து செய்வதற்காக சென்னை குடும்ப நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தாக்கல் செய்தார். நான் எனது வழக்கறிஞர் மூலமாக அதில் ஆஜராகி, சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்தேன்.

இந்நிலையில் எனது அலைபேசி எண்ணிற்கு வெளிநாட்டு நம்பர் ஒன்றில் இருந்து அழைப்பு வரத் தொடங்கியது. அவர் பெயர் மஞ்சு என்றும் மலேசியாவில் வசிப்பதாகவும், ஹரிநாடார் தனது கணவர், எங்களுக்கு இரண்டு குழந்தை இருப்பதாகவும் தெரிவித்தார்.

விவகாரத்து வழக்கில் சம்மதம் தெரிவித்து விடுமாறும் கூறினார். நான் முடியாது என்று தெரிவித்ததால் பலமுறை எனது செல்போனுக்கு கொலை மிரட்டல் ஆடியோக்களை அனுப்பி வருவதாகவும் காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று தெரிவித்தார்.

மேலும், "எனது கணவரை மோசடி வழக்கில் பெங்களூரு காவல்துறையினர், கேரளாவில் மஞ்சுவுடன் இருக்கும் போது கைது செய்ததால் நீதிபதி மற்றும் காவல்துறையில் ஹரி நாடாரின் மனைவி மஞ்சு தான் என்றும் கூறியுள்ளதால், சிறைச்சாலையில் அவரைச் சந்திக்க என்னை அனுமதிக்கவில்லை. என்னுடைய புகாருக்கு காவல்துறையினர் மஞ்சுவை விசாரணைக்கு அழைத்தும் இதுவரை அவர் ஆஜராகவில்லை.

எனவே தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் மஞ்சு மீதும் இதற்கு தூண்டுகோலாக இருக்கும் எனது கணவர் ஹரி நாடார் மீதும் நடவடிக்கை எடுத்து, எனது கணவரை என்னோடு சேர்த்து வைக்க வேண்டும்" என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஹரி நாடாரை பனங்காட்டு படை கட்சியிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரியலூர் மாணவியின் உடலை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details