தமிழ்நாடு

tamil nadu

திமுக பிரமுகர் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சரணடைந்த குற்றவாளி

By

Published : Jan 31, 2022, 3:40 PM IST

நெல்லையில் தேர்தல் பகையால் திமுக பிரமுகர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

திமன்றத்தில் சரணடைந்த குற்றவாளி
திமன்றத்தில் சரணடைந்த குற்றவாளி

நெல்லை: பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில் திமுக 38ஆவது வார்டு செயலாளராக இருந்தவர் அபே மணி என்ற பொன்னுதாஸ் (38). நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பொன்னுதாஸை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

இதையடுத்து, பாளையங்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வுசெய்தனர். பின்னர், பொன்னுதாஸின் உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற்கூறாய்வுக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணை

இந்நிலையில், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கொலைசெய்யப்பட்ட மணியின் தாயார் பேச்சியம்மாள் போட்டியிட விருப்பமனு பெற்றுள்ளார். இதற்கான நேர்காணலில் பேச்சியம்மாள் கலந்துகொள்ளவுள்ளார்.

எனவே நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின், உள்கட்சிப் பூசலில் ஏற்பட்ட மோதலால் நடந்த கொலையா அல்லது வரும் 1ஆம் தேதி பாளையங்கோட்டை பகுதியில் டாஸ்மாக் கடையை பொன்னுதாஸ் குத்தகைக்கு எடுக்கவுள்ள நிலையில், தொழில் ரீதியாக ஏற்பட்ட பகையா என்ற அடிப்படையில் காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், கொலை நடந்த 36 மணி நேரத்தில் காவல் துறையினர் ஏழு பேரை உடனடியாக கைதுசெய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் அருண் பிரவீன் நெல்லை நீதிமன்றத்தில் நீதிபதி ஜெய் கணேஷ் முன்னிலையில் சரணடைந்தார்.

காவல் நிலையத்தில் சரணடைந்த குற்றவாளிகள்

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து, கருப்பையா, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன், ஈஸ்வரன், ஆசை முத்து, சாத்தான்குளத்தைச் சார்ந்த அழகுராஜ், பாளையங்கோட்டையைச் சேர்ந்த தேவராஜ் உள்பட மொத்தம் எட்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சரணடைந்த அருண் பிரவீன் உள்பட எட்டு பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீநிபதி ஜெய் கணேஷ் உத்தரவிட்டார்.

இதையடுத்து, எட்டு பேரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். தேர்தல் முன்பகை காரணமாகவே இந்தக் கொலை சம்பவம் நடந்ததாக காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது கொல்லப்பட்ட பொன்னுதாஸின் தாயார் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று துணை மேயர் பதவியைப் பிடிக்க திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

கொலைக்கான காரணம்

அதேசமயம் அருண் பிரவீனின் உறவினர் ஒருவரும் துணை மேயர் பதவியைக் குறிவைத்துள்ளார். எனவே பேச்சியம்மாள் தங்களுக்குப் போட்டியாக வந்துவிடக் கூடாது என்பதால் அவரைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் எனப் பொன்னுதாஸிடம் அருண் பிரவீன் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

ஆனால் பின்வாங்காமல் தனது தாயாரைப் போட்டியிட வைக்கும் முயற்சியில் பொன்னுதாஸ் ஈடுபட்டார். அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் அருண் பிரவீன் கூலிப்படையை வைத்து பொன்னுதாஸை தீர்த்துக் கட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சாலை விபத்தில் காயமடைந்தவரை காப்பாற்றிய அமைந்தகரை காவலர்கள்

ABOUT THE AUTHOR

...view details