தமிழ்நாடு

tamil nadu

150 ஏக்கர் நெற்பயிர்களை சுருட்டிச் சென்ற வெள்ளம்...நிர்கதியாக நிற்கும் நெல்லை விவசாயிகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 3:08 PM IST

Updated : Dec 21, 2023, 6:21 AM IST

Tirunelveli Flood: கடந்த 2 நாட்களாகப் பெய்த தொடர் கனமழை காரணமாக நெல்லையில் உள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி, நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

tirunelveli flood
நெற்பயிர்களை சுருட்டி சென்ற பெரும் வெள்ளம்

வெள்ளத்தில் மூழ்கிய 150 ஏக்கர் நெற்பயிர்கள்.. உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை

திருநெல்வேலி: அரபிக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வெளுத்து வாங்கியது. அதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.

மேலும் நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விடிய விடிய தொடர்ந்து பெய்த கனமழையால் மலைப்பகுதியில் இருந்து பல லட்சம் கன அடி மழை நீர் ஆக்ரோஷத்துடன் அணைகளை நோக்கிப் பெருக்கெடுத்து ஓடியது. ஆகையால், மணிமுத்தாறு, பாபநாசம் போன்ற மாவட்டத்தின் பிரதான அணைகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் கன அடி வரை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

அதனால் நெல்லை மாவட்ட முழுவதும் வெள்ளக்காடாக மாறி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் மழை பெய்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதாவது ஒரு ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் நெல்லை மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்தும், தாமிரபரணி ஆற்றில் ஆக்ரோஷத்துடன் பொங்கி எழுந்த வெள்ள நீர் மாவட்டத்தில் ஆங்காங்கே உள்ள குளம் மற்றும் ஏரிகளை நோக்கிச் சீறிப்பாய்ந்தது. அதனால் ஆற்றின் வழிப்பாதை முழுவதும் நிரம்பி வழிந்த வெள்ளநீர், அருகே உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்தது. ஏற்கனவே பெய்த தொடர் மழையால் விளை நிலங்களுக்குள் தண்ணீர் சூழ்ந்த நிலையில், தற்போது தாமிரபரணி ஆறு, குளம் மற்றும் ஏரிகளிலிருந்து வெளியேறும் வெள்ளநீரும் புகுந்துள்ளது.

இதனால் பல இடங்களில் விளை நிலங்கள் இருக்கும் இடமே அடையாளம் தெரியாத அளவிற்குத் தண்ணீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது. நெல்லையில் சமீபத்தில் தான் விவசாயிகள் பாசன சாகுபடியில் நெற்பயிர்களைப் பயிரிட்டு வந்தனர். இந்நிலையில், 2 நாட்களாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழையால் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயிகள் பயிரிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். தற்போது அவை அனைத்தும் தண்ணீரில் மூழ்கி இழுத்துச் செல்லப்பட்டதால் விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக நெல்லை முதல் தென்காசி பிரதான சாலையில், ஆலங்குளம் அருகே தொட்டியான் குளத்தின் கரை உடைந்து, அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 150 ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. முன்னர் இந்த குளத்தின் கரை மிகவும் பலமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது தென்காசி - நெல்லை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மேற்கொண்டு வருவதால், அதற்காக குளத்தின் அருகில் பாலம் கட்டி வருவதாகவும், மேலும் அந்த பாலத்திற்காக குளத்தின் கரையைச் சேதப்படுத்தியதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் அடித்துச் சென்றுள்ளதால் மீண்டும் நட முடியாது எனவும், தற்போது தேங்கியுள்ள தண்ணீர் வடிவதற்கும் பல நாட்கள் ஆகும் என்பதால் இந்த ஆண்டு தங்களின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு விளைச்சலை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் தொடரும் மழையால் வீடுகள் இடிந்து சேதம்; வருவாய்த்துறையினர் ஆய்வு!

Last Updated :Dec 21, 2023, 6:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details