தமிழ்நாடு

tamil nadu

அமெரிக்க ராணுவம் கைப்பற்றிய பணத்தில் பங்கு தருவதாகக் கூறி ரூ.36 லட்சம் மோசடி

By

Published : Jun 18, 2022, 10:52 AM IST

அமெரிக்க ராணுவம் கைப்பற்றிய பணத்தில் பங்கு தருவதாக கூறி தேனி ஓட்டல் ஊழியரிடம் ரூ.36 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்த தேனி சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி சைபர் கிரைம்
தேனி சைபர் கிரைம்

தேனி:பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்த ராமையா என்பவர் மகன் முருகானந்தம். இவர் சமையல் கலை படிப்பு படித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள நட்சத்திர உணவகத்தில் சில ஆண்டுகள் வேலைப் பார்த்து வந்தார். பின்னர், அவர் சொந்த ஊருக்கு வந்து விட்டார். இவர் தனது அக்காள் மகன் அஜீகண்ணன் என்பவருடைய பேஸ்புக் கணக்கை தனது செல்போனில் வைத்து பயன்படுத்தி வந்துள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த பேஸ்புக் கணக்கில், எமிலி ஜோன்ஸ் என்ற பெண்ணின் பெயரில் ஒரு குறுஞ்செய்தி சென்றுள்ளது. அதில், தன்னை வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து முருகானந்தம் தனது வாட்ஸ்-அப் எண்ணில் இருந்து அந்தப் பெண் கூறிய வாட்ஸ்-அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.

அப்போது அந்த பெண், தான் அமெரிக்க ராணுவத்தில் செவிலியராக பணியாற்றி வருவதாகவும், சிரியா நாட்டின் மீது அமெரிக்க படை நடத்திய ஒரு மீட்பு பணியின்போது, சிரியா கலவரக்காரர்களிடம் இருந்து பெரும் தொகையை, அமெரிக்க ராணுவம் கைப்பற்றியதாகவும், அந்த பணத்தை தங்கள் நாட்டின் வங்கிக் கணக்கில் சேர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதனால், அமெரிக்க ராணுவம் அந்த பணத்தை ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு பகிர்ந்து அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும், அமெரிக்க ராணுவத்தில் செவிலியராக பணியாற்றும் தன்னுடைய பங்காக ரூ.20 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15½ கோடி) கிடைக்கும் என்றும், அந்த பணத்தை தன்னால் பாதுகாப்பாக வைத்து இருக்க முடியாது என்பதால் தனக்கு தெரிந்த நம்பிக்கையான நபர் யாரிடமாவது கொடுத்து பாதுகாப்பாக வைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இந்த பணத்தை பாதுகாப்பாக வைத்து இருந்தால் அந்த பணத்தில் 30 % தொகையை கமிஷனாக கொடுப்பதாகவும், அதற்கு விருப்பம் இருந்தால் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் அந்த பெண், முருகானந்தத்திடம் குறுஞ்செய்தி வாயிலாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். 30 % என்றால் இந்திய மதிப்பில் சுமார் ரூ.4½ கோடி கிடைக்கும். இதை நம்பிய முருகானந்தம், அந்த பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க ஒப்புக் கொண்டார். பின்னர், அந்த பெண், முருகானந்தத்தின் விவரங்களை கேட்டு பெற்றுக்கொண்டு, ஏஜென்சி ஒன்றின் மூலம் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, முருகானந்தம் செல்போன் எண்ணுக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக யாரோ ஒருவர் பேசினார். இதை தொடர்ந்து அந்த நபர், எமிலி ஜோன்ஸ் என்ற பெயரில் ஒரு பார்சல் வந்துள்ளதாகவும், அதற்கு சுங்கத்துறை பரிசீலனை, தடையில்லா சான்று போன்றவை பெறுவதற்கான கட்டணம் செலுத்தவேண்டும் என்று கூறினார். இதையடுத்து அவர் கேட்ட தொகையை முருகானந்தம் அனுப்பி வைத்தார்.

அதன்பிறகு அந்த பணத்தை அவருடைய வங்கிக் கணக்கில் அனுப்புவது, அதற்கு இந்த பணம் பயங்கரவாத தொடர்பு எதுவும் இல்லை என்பதற்கான சான்று பெறுதல் போன்ற பல காரணங்களைக் கூறி வெவ்வேறு எண்களில் இருந்து முருகானந்தத்துக்கு அழைப்புகள் வந்தன. அதை நம்பிய அவரும் பல தவணையாக கேட்ட நபர்களுக்கு எல்லாம் அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பி வந்துள்ளார்.

அந்த வகையில் ரூ.36 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில், மேலும் அந்த மர்ம நபர்கள் சில காரணங்களைக் கூறி, மேலும் பணம் கேட்கவே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இதுகுறித்து தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் காவல் ஆய்வாளர் அரங்கநாயகி விசாரணை நடத்திய பின்பு இந்த நூதன மோசடி குறித்து சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் வழக்குப் பதிவு செய்தார். மோசடி நபர்கள் தொடர்பு கொண்ட 5 செல்போன் எண்கள், அவர்கள் பயன்படுத்திய 13 வங்கிக் கணக்கு எண்களை வைத்து சைபர் கிரைம் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: Online loan Fraud: 3 மாதத்தில் ரூ.11 கோடி வரை மோசடி; புனே சென்று 4 பேரை தூக்கிய தேனி போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details