தமிழ்நாடு

tamil nadu

பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது - நீதிமன்றம்

By

Published : Jun 30, 2022, 9:36 PM IST

பெரியகுளம் நகராட்சியின் துணைத் தலைவர் ராஜா முகமதுவை தகுதி நீக்கம் செய்ததற்கு தேனி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் எடுக்கக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியகுளம் நகராட்சி துணைத் தலைவரை தகுதி நீக்கம் செய்வற்கு நீதிமன்றம் தடை
பெரியகுளம் நகராட்சி துணைத் தலைவரை தகுதி நீக்கம் செய்வற்கு நீதிமன்றம் தடை

தேனி:நடந்து முடிந்த நகர்ப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியின் 26ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், ராஜா முகமது. இந்நிலையில் நகர் மன்றத் தலைவர் பதவியை திமுக உறுப்பினருக்கும் நகர்மன்ற துணைத்தலைவர் பதவியை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உறுப்பினருக்கும் என திமுக தலைமை அறிவித்தது.

இந்நிலையில் பெரியகுளம் நகர்மன்ற துணைத்தலைவர் பதவியை திமுக சார்பில் 26ஆவது வார்டில் வெற்றி பெற்ற ராஜா முகமதுவுக்கு கொடுக்க தேர்வு செய்யப்பட்டார். இவர் நகர் மன்ற துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து கூட்டணிக்கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டதால், அவரை திமுக தலைமை ராஜினாமா செய்து கூட்டணி கட்சிக்கு துணைத் தலைவர் பதவியை கொடுக்க உத்தரவிட்டது.

ஆனால், ராஜா முகமது ராஜினாமா செய்யாத நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக 26ஆவது வார்டில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர் ராஜா முகமது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் நகராட்சிக்கு சொந்தமான மீன் கடையை அவர் பெயரில் ஏலம் எடுத்து நடத்தி வந்ததை காண்பிக்காததால் ஒழுங்கு நடவடிக்கையாக அவரை நகர்மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராஜா முகமது உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யலாம் என திருப்பி அனுப்பியது. இதையடுத்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தகுதி நீக்கத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தேனி மாவட்ட தலைமை நீதிபதி சஞ்சய் பாபு, 26ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினரான ராஜா முகமது, நகர் மன்ற உறுப்பினராகவும் நகர்மன்ற துணைத் தலைவராகவும் இருந்ததை தகுதி நீக்கம் செய்ததை 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை தடை விதிப்பதாகவும், ராஜா முகமது நகர்மன்ற துணைத் தலைவராக பதவி வகிப்பதற்கு எந்தவித இடையூறும் நகராட்சி நிர்வாகம் செய்யக் கூடாது என உத்தரவு வழங்கினார்.

இந்நிலையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் பெரியகுளம் நகராட்சியின் 26ஆவது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளதாக அறிவித்து தேர்தல் நடத்துவதற்காக வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து இறுதிப்பட்டியல் நேற்று (ஜூன் 29) வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:டாஸ்மாக் போல் வருமானம் இருந்தால் தான் வனத்துறையிடம் அக்கறை காட்டுவீர்களா..? - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details