தமிழ்நாடு

tamil nadu

விடுதி அருகே அட்டூழியம் செய்யும் மது பிரியர்கள்..! நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டத்தில் இறங்கிய கல்லூரி மாணவர்கள்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 1:38 PM IST

College Students Protest in Theni: தேனி அருகே கல்லூரி மாணவர்கள் விடுதி அருகே குடிபோதையில், மாணவர்களிடம் தகராறில் ஈடுபடக்கூடிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி நூற்றுக்கணக்கான மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விடுதி அருகே அட்டூழியம் செய்யும் மது பிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாணவர்கள் சாலை மறியல்
விடுதி அருகே அட்டூழியம் செய்யும் மது பிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாணவர்கள் சாலை மறியல்

விடுதி அருகே அட்டூழியம் செய்யும் மது பிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாணவர்கள் சாலை மறியல்

தேனி: போடிநாயக்கனூர் அருகே மேலசொக்கநாதபுரம் அருகில் அமைந்துள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில், சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களுள் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்லூரி விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர்களின் விடுதிக்கு அருகில் உள்ள திறந்தவெளி பகுதியில், கஞ்சா மற்றும் மது போதை பிரியர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. மேலும், விடுதிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் மதுபான பிரியர்களுக்கு இடையே ஏற்படும் தகராறில் மாணவர்கள் தாக்கப்படுவதாகவும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இது மாணவர்கள் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (டிச.10) விடுதிக்குச் சென்று கொண்டிருந்த மாணவர்களை அப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த சில நபர்கள் குடிபோதையில் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.

அதனை அடுத்து, கல்லூரி மாணவர் மற்றும் மது பிரியர்கள் மத்தியில் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மது போதையில் இருந்தவர்கள் கல்லூரி மாணவர்களைத் தாக்கியுள்ளனர். பின்னர் அது குறித்து மாணவர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டு, தங்கள் விடுதியில் இருந்து போடிநாயக்கனூர் பேருந்து நிலையத்திற்கு நடந்தே சென்று, பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

அதன் பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போடிநாயக்கனூர் சரக துணை கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையிலான காவல்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மாணவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், மாணவனைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

தாங்கள் பலமுறை தாக்கப்பட்டுள்ளதாகவும், தாங்கள் விடுதிக்கு அருகே உள்ள திறந்தவெளி மதுபான கேளிக்கை அரங்காக மாறி வருவதாகவும், அது குறித்து காவல்துறையில் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மாணவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதனை அடுத்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மாணவர்களிடம் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் காவல்துறை அதிகாரிகள் அளித்த உறுதியின் அடிப்படையில் சாலை மறியலில் ஈடுபட்டு இருந்த மாணவர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், அப்பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு மது மற்றும் கஞ்சா விற்பனை செய்வதற்காக சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:வேட்டவலம் அருகே கணவரின் முறையற்ற உறவு குறித்து மனைவி புகார்.. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என திடீர் தர்ணா..!

ABOUT THE AUTHOR

...view details