தமிழ்நாடு

tamil nadu

போக்குவரத்து தொழிற்சங்க வேலை நிறுத்தம்; தேனியில் இரவே பணிமனைக்கு திரும்பிய பேருந்துகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 7:15 AM IST

TN Bus strike: 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து சங்கத்தினர் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்ததை அடுத்து, தேனியில் நேற்றிரவு முதல் பேருந்துள் பணிமனைக்குத் திரும்பின.

வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு இரவே பணிமனைக்கு திரும்பிய பேருந்துகள்
வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு இரவே பணிமனைக்கு திரும்பிய பேருந்துகள்

தேனி: அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு தொழிற்சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் உடன் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் நேற்று (ஜன.9) இரவு 12 மணி முதல் இயங்காது என போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு பயணிகளை இறக்கி விட்டுவிட்டு, பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அந்த வகையில், தேனி மாவட்டத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பிறகு, பழனிச்சட்டிப்பட்டி பகுதியில் உள்ள பணிமனைக்கு அரசுப் பேருந்துகள் திரும்பியது. இதனிடையே பணிமனை முன்பு "ஓடாது ஓடாது.. அரசு பேருந்து ஓடாது", "போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை பேருந்துகள் ஓடாது" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன.

முன்னதாக, நேற்று போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து நிதித்துறைச் செயலர் உடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அதனைத் தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை ஆணையரகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க:ஓடுமா? ஓடாதா? தொமுச - அண்ணா தொழிற்சங்க, சிஐடியூ போஸ்டர் மோதல்; பயணிகள் குழப்பம்!

அப்போது, தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை ஆணையம், தமிழ்நாடு போக்குவரத்து துறை, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை, சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, அரசு தற்போது எந்த கோரிக்கையையும் ஏற்க முடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தொழிற்சங்கங்கள் கூறின.

மேலும், தமிழகத்தில் இருக்கும் எந்த ஒரு பொதுத்துறை தொழிலாளர்களுக்கும் இழைக்கப்படாத அநீதியை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு தொடர்ந்து இழைத்துக் கொண்டே வருவதாக வேதனை தெரிவித்தவர், இந்த பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிகளை எடுத்துக் கூறியும், அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசைக் கண்டித்து நடத்தப்படும் தங்களின் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், அரசிடம் தங்கள் சார்பில் தங்களின் கோரிக்கைகள் குறித்து அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதலே அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:திட்டமிட்டபடி நாளை முதல் ஸ்டிரைக் அறிவித்த தொழிற்சங்கங்கள்.. அமைச்சர் சிவசங்கர் ரியாக்‌ஷன் என்ன?

ABOUT THE AUTHOR

...view details