தமிழ்நாடு

tamil nadu

குன்னூர் அடர் வனப்பகுதியில் பழுதாகி நின்ற மலை ரயில்.. சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 7:08 PM IST

nilgiri mountain train:நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பழுதாகி நின்ற மலை ரயிலால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Tourists suffered as mountain train breaks down in dense forest
அடர்ந்த வனப்பகுதியில் பழுதாகி நின்ற மலை ரயிலால் சுற்றுலாப் பயணிகள் அவதி

அடர்ந்த வனப்பகுதியில் பழுதாகி நின்ற மலை ரயிலால் சுற்றுலாப் பயணிகள் அவதி

நீலகிரி:உதகை - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலானது யுனஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயிலாகும். கடந்த மாதம் முதல் பெய்து வந்த கனமழையால் ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தது. இதனால் பலமுறை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு, பின் இடையே சேவைகள் தொடங்கப்பட்டது.

அந்த வகையில், கடந்த மூன்று நாட்களுக்குப் பின் நேற்றுதான் (டிச.23) மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், இன்று (டிச.24) காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில், குன்னூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் இன்ஜின் பழுதாகி நின்றதால், சுற்றுலா பயணிகள் செய்வதறியாது அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் கொண்டனர்.

அதேசமயம் அப்பகுதி ரயில் தண்டவாளத்தில் காட்டு யானைக் கூட்டமும் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அச்சமடைந்தனர். அதையடுத்து, குன்னூரில் இருந்து மாற்று ரயில் நான்கு பெட்டிகளுடன் அனுப்பப்பட்டு முதற்கட்டமாக சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுப்பட்டது. பின்னர், பழுதாகிய ரயிலை பின்பு வேறு இன்ஜின் அனுப்பி மீட்கும் பணி நடைபெற்றது.

மலை ரயிலானது காலை 10:20, மணிக்கு குன்னூர் வந்தடைய வேண்டிய ரயிலாகும். ஆனால் பாதி வழியில் ரயில் சிக்கிக் கொண்டதால், சுற்றுலாப் பயணிகள் உணவு, தண்ணீர் இன்றி அவதிக்கு உள்ளாகினர். மேலும், சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, நாள் முழுவதும் ரயிலிலேயே பயணிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இது குறித்து சுற்றுலா பயணிகள் தெரிவிக்கையில், “நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் தற்போது முறையான பராமரிப்பு இன்றி உள்ளதால், ரயில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு நடுக்காட்டில் சிக்கிக் கொண்டோம். உணவு இன்றி பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டோம். குழந்தைகளுடன் பயணித்த பெற்றோர்களின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயிலை அதன் பாரம்பரியம் மாறாமல் பராமரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஏழை மாணவி கல்லூரி படிப்பைத் தொடர உதவிய விஜய் மக்கள் இயக்கத்தினர்..!

ABOUT THE AUTHOR

...view details