தமிழ்நாடு

tamil nadu

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வலுக்கும் எதிர்ப்பு - உதகையில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

By

Published : Mar 10, 2023, 1:09 PM IST

உதகை ஆளுநர் மாளிகை முன் கருப்புக் கொடி ஏந்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வலுக்கும் எதிர்ப்பு - உதகையில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

நீலகிரி: ஆளுநர் ஆர்.என்.ரவி, 5 நாட்கள் சுற்றுப் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். உதகையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அவர் சென்ற நிலையில், அங்கு வைத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழ்நாட்டில் நாற்பதிற்கும் உயிரிழந்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தால் அப்பாவி மக்கள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்புடன் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிறைவேற்றினார்.

இந்த மசோதா ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என் ரவி கடந்த 6ஆம் தேதி தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பினார். சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு 139 நாட்களைக் கடந்த நிலையில் மசோதாவை ஆளுநர் ஆர்.என் ரவி திருப்பி அனுப்பியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தமிழ்நாடு முழுவதும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. அரசியல் கட்சியினர் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்த பரபரப்பான சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று (மார்ச்.09) கூடியது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கக் கோரிய மசோதாவைச் சட்டமன்றத்தில் இயற்றி மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்புவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டதாகத் தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, 5 நாட்கள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டத்திற்குச் சென்று உள்ளார்.

உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தங்கி உள்ளார். ஆளுநரின் செயலை கண்டித்து இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து இருந்தன. உதகை ஆளுநர் மாளிகையில் தங்கி உள்ள ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்தும், உடனடியாக உதகையை விட்டு அவர் வெளியேற வலியுறுத்தியும் உதகை ஆளுநர் மாளிகை முன் உள்ள அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

ஆளுநருக்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சிபிஐஎம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பத்ரி தலைமையில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுகளின் கட்டுப்பாட்டைத் தான் ஆளுநர் பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில் அதனைத் தமிழ்நாட்டு ஆளுநர் மீறுகிறாரா என்றும், சமூக நீதி மற்றும் பொது நீதி சீர்திருத்தக் கருத்துக்களை எதிரானது என அரசியல் பேசுவதாக கூறி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் தடுத்து நிறுத்திக் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனால் அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. தொடர் போராட்டங்களை தொடர்ந்து அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் கேரள மாநிலம் வைத்தேரிக்கு செல்வதாக இருந்த ஆளுநர் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க:"ஆன்லைன் ரம்மி தடை சட்டம் இந்தியாவுக்கு முன்மாதிரி, ஆளுநருடன் விவாதிக்கத் தயார்" - அமைச்சர் ரகுபதி!

ABOUT THE AUTHOR

...view details