தமிழ்நாடு

tamil nadu

தனியாருக்கு விடப்பட்ட மலை ரயில் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது!

By

Published : Dec 12, 2020, 3:39 PM IST

நீலகிரி: மலை ரயிலை தனியாருக்கு வாடகைக்கு விட்டதைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இன்று மலை ரயில் இயக்கப்பட்டது.

நீலகிரி
நீலகிரி

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை 46.5 கிலோ மீட்டர் கொண்ட மலை ரயில் பாதையின் இரு புறங்களிலும் அழகிய இயற்கை காட்சிகள் காணப்படுகின்றன. மலை ரயில் பயணத்தின்போது வனப்பகுதியில் உலாவும் காட்டு விலங்குகளையும், இயற்கையின் அழகையும் ரசித்து முடியும் என்பதால் சுற்றுலா பயணிகள் மலை ரயில் பயணத்தை பெரிதும் விரும்புகின்றனர்.

மலைப்பாதை தண்டவாளத்தில் பல் சர்க்கரம் மூலம் ரயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே உதகை மலை ரயில்தான் பல்சர்க்கர மூலம் இயக்கப்படுகிறது. கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் தனியார் மூலம் மலை ரயில் இயக்கப்பட்டது. சுற்றுலா பயணி ஒருவருக்கு கட்டணமாக மூன்றாயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் மூலம் மலை ரயில் இயக்கப்பட்டதால் மலை ரயில் ஆர்வலர்களும், பொதுமக்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படும் மலை ரயில்

இந்த நிலையில் இந்த வாரம் பல்வேறு தரப்பினர் மறியல் போராட்டங்கள் அறிவித்ததால் துப்பாக்கி ஏந்திய போலீசார் உடன் மலை ரயில் இயக்கப்பட்டது. tn43 என்ற தனியாரின் பெயர் பலகை அகற்றப்பட்டு என்எம்ஆர் என்ற நீலகிரி மலை ரயில் என பெயர் மாற்றப்பட்டது.

விமானப் பணிப்பெண் போன்று கடந்த முறை பணிப்பெண்கள் அமர்த்தப்பட்டு இருந்த நிலையை மாற்றி, இந்த முறை ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். போலீசாருக்கு என தனியாக ஒரு ரயில் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஊட்டியில் விடப்பட்டுள்ள தனியார் மலை ரயிலும்; அதற்கு எழும் கண்டனங்களும்!

ABOUT THE AUTHOR

...view details