தமிழ்நாடு

tamil nadu

Thanjavur - ஆஞ்சநேயருக்கு 121 கிலோ காய்கறியில் அலங்காரம் - பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட தக்காளிகள்!

By

Published : Jul 17, 2023, 5:55 PM IST

ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஒன்பதடி உயரம் கொண்ட ஆஞ்சநேய சாமிக்கு 121 கிலோ காய்கறிகளால் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட தக்காளிகள்
அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயசுவாமிக்கு 121 கிலோ காய்கறிகளால் அலங்காரம்

அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயசுவாமிக்கு 121 கிலோ காய்கறிகளால் அலங்காரம்

தஞ்சாவூர்: இன்று ஆடி முதலாம் நாள் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள ஒன்பதடி உயரம் கொண்ட விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமிக்கு 121 கிலோ தக்காளி மற்றும் பல காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை குறைய வேண்டி பிரார்த்தனையில் மக்கள் ஈடுபட்டனர்.

ஆஞ்சநேயரை போற்றி வணங்கும் வகையில் கும்பகோணம் பாலக்கரை விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், நல்ல மழை வேண்டியும், நவதானியங்கள், காய்கனிகள் உள்ளிட்ட அனைத்து வகை வேளாண் பொருட்களும் அமோக விளைச்சல் காண பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து அனைத்து வகை தொழில்களும் மேன்மை பெறவும், உலக மக்கள் நலன் வேண்டியும் ஆடி மாத முதல் அமாவாசையான இன்று (ஜூலை 17) வழிபட்டனர்.

121 கிலோ காய்கறிகள்:கடுமையாக உயர்ந்துள்ள காய்கறி விலை குறையவும் குறிப்பாக தக்காளி விலை குறையவும் வேண்டி 121 கிலோ எடையிலான பூசணிக்காய், பரங்கிக்காய், சுரைக்காய், மாங்காய், கோவக்காய், கத்திரிக்காய், வாழைக்காய், புடலங்காய், பாவற்காய், அவரைக்காய், வெண்டைக்காய், கருணைக்கிழங்கு, சௌ சௌ, தக்காளி, முள்ளங்கி, முளைக்கீரை, அகத்திக்கீரை, உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கேரட், பீட்ரூட், காலிஃபிளவர், நூல்கோல், காராகருணை, முட்டைகோஸ், பீன்ஸ், பஜ்ஜி மிளகாய், ஊசி மிளகாய் மற்றும் குடை மிளகாய் என 30 வகை காய்கறிகளை கொண்ட சாகம்பரி அலங்காரத்தில் 9 அடி உயர விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

இதையும் படிங்க:Tiruvannamalai BharataNatyam: 407 மாணவிகள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை!

இந்த சிறப்பு பிரார்த்தனையில் குறிப்பாக தக்காளி விலை குறைய வேண்டியும் மழை பெய்ய வேண்டும் என்ற பொது பிரார்த்தனைகளுடன் திரிசதி மற்றும் சகஸ்கரநாம அர்ச்சனையும் நடத்தப்பட்டது. பின்னர், 1001 முறை ராம நாம ஜெபத்துடன் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற பிறகு பஞ்சாரார்த்தியும் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். தரிசனம் செய்த அனைவருக்கும் தக்காளியுடன் குங்கும பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பரிகாரம்:இத்தலத்தில் ஆஞ்சநேய சுவாமியிடம் தங்களது வேண்டுதலை வெள்ளைத் தாளில் எழுதி, அதனை மட்டை தேங்காயுடன் சிவப்பு நிறத்துணியில் கட்டி, அமாவாசை பூஜையில் வைத்து மனமுருக பிரார்த்தனை மேற்கொண்டால் எண்ணிய காரியம் மூன்று அமாவாசை காலங்களுக்குள் அதாவது 90 நாட்களில் முழுமையாக நிறைவேறும் என்பது அனுமன் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம், புத்தி, கீர்த்தி, பலம், தைரியம், மனோ சக்தி ஆகியவற்றை அருள்பவரான அனுமனை வரம் அருளும் மூர்த்தி என்றும்; வேண்டியவர்களுக்கு வேண்டியதை அருளும் வரப்பிரசாதி என்றும் அழைப்பர். இதனால், பக்தர்கள் இவருக்கு பிரார்த்தனைகள் செய்து கிரக தோஷம் நீங்க, இவருக்கு வடை மாலை சாத்தியும், கல்வியில் தடை, சுணக்கம் நீங்க வெற்றிலை மாலை சாத்தியும், பிரிந்த தம்பதியினர் சேர தேங்காய் மாலையும், தடைகள் நீங்கி உயர் பதவி அடைய துளசி மாலை சாத்தியும், தீராத நோய் தீர வெண்ணெய் காப்பு சாத்தியும், குழந்தை பேறு கிட்ட சந்தனக் காப்பு சாத்தியும் வழிபடுவது போன்ற முக்கிய பிரார்த்தனைகளில் மக்கள் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:ஆடி அமாவாசையில் குழப்பம்.. மயிலாடுதுறை புனித நீராட குறைந்த மக்கள் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details