தமிழ்நாடு

tamil nadu

பாஜக-விற்கு இணங்காத மாநிலங்களைப் பிடிக்க இதுதான் திட்டம்.. ஜம்மு & காஷ்மீர் தீர்ப்பே உதாரணம் - உ.வாசுகி குற்றச்சாட்டு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 5:27 PM IST

Updated : Dec 15, 2023, 6:29 PM IST

Marxist Communist Party: பாஜக-வுடன் இணக்கம் காட்டாத மாநில அரசுகளைக் கலைத்தோ அல்லது கவிழ்த்தோ குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, அங்குத் தேவையான சட்டத்திருத்தங்களை எளிதாகச் செய்யக் கதவு திறப்பதற்கான தீர்பாக ஜம்மு & காஷ்மீர் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.

Marxist Communist Party
உ.வாசுகி

பாஜக-விற்கு இணங்காத மாநிலங்களைப் பிடிக்க இதுதான் திட்டம்.. ஜம்மு & காஷ்மீர் தீர்ப்பே உதாரணம் - உ.வாசுகி குற்றச்சாட்டு!

தஞ்சாவூர்:விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான, பி.ராமமூர்த்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று(டிச.15) மாலை கும்பகோணத்தில் செஞ்சட்டை பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற வருகை தந்துள்ளார். பின் செய்தியாளர்களிடம் பேசிய உ.வாசுகி, “நாடாளுமன்ற வளாகத்தில், பாதுகாப்பு குறைபாடு ஏற்படக் காரணமாக இருந்து, பிரச்சனைக்குரியவர்களுக்கு பாஸ் வழங்கிய பாஜக எம்.பி பிரதாப் சின்கா மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் வழக்கம் போல நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார்.

அதே வேளையில், பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணைகோரிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கேள்வி கேட்கும் உரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு தடுத்துள்ளது.

இது தலையாட்டி பொம்மையாக நாடாளுமன்றம் செயல்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. உச்ச நீதிமன்றத்தின் ஜம்மு & காஷ்மீர் குறித்த தீர்ப்பு என்பது பாஜகவுடன் இணக்கம் காட்டாத தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில அரசின் மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில், அதனைக் கலைத்தோ, கவிழ்த்தோ அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சியினை அமல்படுத்தி அதன் வாயிலாக, தாங்கள் விரும்புகிற விதமான சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு ஒரு மாநிலத்தை 2 அல்லது 3 ஆகப் பிரிக்கக் கதவு திறக்கும் தீர்ப்பாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

பாஜகவுடன் இணக்கமாக இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் அராஜகம் அதிகரித்தே வருகிறது. ஆளுநர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் அரசியல் கருவிகளாகவே செயல்படுகின்றனர். சென்னை மழை வெள்ளப் பாதிப்பிற்கு மாநில அரசு ரூ.5,060 கோடி ஒன்றிய அரசிடம் கோரியுள்ள நிலையில், ஒன்றிய அரசு வெறும் ரூ.450 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது வெறும் 10 சதவீதம் கூட இல்லை.

மாநில அரசு கோரிய தொகையினை முழுமையாக ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும். தமிழகத்திற்கான கருணைத் தொகையாக இல்லாமல், ஒன்றிய அரசின் கடமையாக வழங்கிட முன்வர வேண்டும். மாநில அரசின் நிவாரணம் குடும்ப அட்டைக்கு ரூ.6 ஆயிரம் என்பதனை குடும்ப அட்டை இல்லாமல் பாதிக்கப்பட்டோரும் விடுபடாத வகையில், அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

விவசாயப் பாதிப்புகளையும் சிறு, குறு தொழில் நிறுவனப் பாதிப்புகளையும் துல்லியமாக ஆய்வு செய்து, அவர்களுக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு, மின்வாரியத்தைத் தனியார் மயமாக்குவதன் முதல் முயற்சியாக தற்போது ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வற்புறுத்தி வருகிறது.

இதன் காரணமாக இலவச மின்சாரம் விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைக்காத நிலை ஏற்படும். குறிப்பாகத் தஞ்சை மாவட்ட விவசாயிகள், நெசவாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இதற்குக் கேரள அரசு செய்த மாற்று ஏற்பாடுகளைப் போலவே, தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இது குறித்து சிபிஐ எல்லா மாவட்டங்களிலும் பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக அரசின் போது ஜவுளி பூங்கா குறித்த அறிவிப்பு இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. பல பொருட்களுக்கு இங்கு புவிசார் குறியீடுகள் கிடைத்த போதும், தொழில்கள் பெரிய அளவில் வளரவில்லை.

குறிப்பாக, ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குப் பிறகு பல தொழில்கள் நசிந்து வருகின்றது. நெசவாளர்களைப் பாதுகாக்கக் கொண்டு வரப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களும் நெசவாளர்களையும், அவர்களது தொழிலையும் பாதுகாக்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த பேட்டியின் போது, தஞ்சை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் சின்னை பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், கண்ணன், மாநகரக் குழுச் செயலாளர் கா.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:குருப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!

Last Updated : Dec 15, 2023, 6:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details