தமிழ்நாடு

tamil nadu

ஹெல்மட் அணிந்தால் பெட்ரோல் இலவசம்! தஞ்சை போலீசாரின் அதிரடி ஆஃபர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 9:51 AM IST

தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பொங்கல் பரிசாக காவல் துறையினர் பெட்ரோல் வழங்கி ஊக்குவித்தனர்.

தஞ்சாவூரில் பொங்கல் பரிசாக வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கிய காவல்துறை
தஞ்சாவூரில் பொங்கல் பரிசாக வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கிய காவல்துறை

தஞ்சாவூரில் பொங்கல் பரிசாக வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கிய காவல்துறை

தஞ்சாவூர்: இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் சாலைகளில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனையடுத்து உயிரிழப்பை தடுக்கும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் சென்றால் போக்குவரத்து காவலர்கள் அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்புகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு விதமாக வித்தியாசமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்ட காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் திருவள்ளுவர் தினம் மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 50 நபர்களுக்கு போலீசார் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கினர்.

இந்த செயல் வாகன ஓட்டிகளுக்கு ஊக்கத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்வில் காவல்துறை டிஎஸ்பி நீலகண்டன், போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தொண்டு நிறுவன செயலாளர் பிரபுராஜ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல் டோக்கனை வழங்கினர். அதைத் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் திருவள்ளுவர் தினம் என்பதால் திருக்குறள் ஒன்று சொல்லி தங்களது வாகனங்களுக்கு அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு சென்றனர்.

காவல்துறையினரின் இந்த நூதன விழிப்புணர்வு பொதுமக்கள் பலராலும் பாராட்டப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கூறுகையில், "தஞ்சாவூர் மாவட்டத்தில் 90 சதவீதம் பேர் இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து வருகின்றனர். ஹெல்மெட் அணியாதர்களுக்கு அபராதமும் எச்சரிக்கையும் விடப்படுகிறது.

மேலும் சிலர் தங்களது ஹெல்மெட்டை வாகனங்களில் பின்பக்கம் மாட்டி வருகின்றனர். காவல்துறைக்கு பயந்து ஹெல்மெட்டை தலையில் அணியாமல் வண்டியில் மாட்டி வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. காவல்துறைக்கு பயந்து ஹெல்மெட் அணியாமல் தங்களது குடும்பத்தினருக்காக உயிரிழப்பை தடுக்க கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து வருவதன் மூலம் தஞ்சாவூர் விபத்தில்லா மாவட்டமாக உருவாகும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: களைகட்டும் தாராசுரம் காய்கறி அங்காடி.. பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details