தமிழ்நாடு

tamil nadu

அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது - தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 7:55 AM IST

Thanjavur Mayor: தஞ்சை மாநகராட்சிக்கு அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

mayor-ramanathan-and-commissioner-maheshwari-conducted-an-inspection-at-thirumanoor-water-station
அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது..தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன்

அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது..தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன்

தஞ்சாவூர்:தஞ்சை மாவட்டம் விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில் ரூ.73 கோடி மதிப்பில் ஆழ்துளை நீர் உறிஞ்சும் கிணறு புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தஞ்சை மாநகராட்சியில் வருகிற 30 ஆண்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என கூறப்படுகிறது.

இந்நிலையில், இங்கு நடைபெற்று வரும் பணியினை மாநகராட்சி மேயர் ராமநாதன், ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முன்னதாக ஆய்விற்கு வந்த மேயர், சரியான நேரத்திற்கு ஆணையர் வரவில்லையா என அலுவலர்களிடம் கேட்டார்.

ஆணையர் அப்போது வரவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் காத்திருந்து பொறுமை இழந்த மேயர், அங்குள்ள கட்டிட இரும்புக் கம்பிகள் மீது போய் உட்கார்ந்தார். சுமார் அரை மணி நேரம் காலதாமதமாக வந்த ஆணையர் மகேஷ்வரி, காரில் இருந்து இறங்கி வந்து வேகமாக மேயரை நோக்கிச் சென்றார். பின்னர், “இவ்வளவு லேட்டாவா வருவீங்க?” என ஆணையரிடம் கடிந்து கொண்டார்.

மேம்பாட்டு பணிகள்:பின்னர் இருவரும் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இது குறித்து மேயர் ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.73 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆழ்துளை நீர் உறிஞ்சும் கிணறு அமைக்கும் பணியை ஆய்வு செய்தோம். இந்த பணி இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடைந்து விடும். இதன் மூலம் 18 எம்எல்டி தண்ணீர் கிடைக்கும்.

ஏற்கனவே புதிதாக கட்டப்பட்ட ஆழ்துளை நீர் உறிஞ்சும் கிணறு மூலம் 18 எம்எல்டி தண்ணீர் கிடைத்தது. இந்த இரண்டு நீர் உறிஞ்சும் கிணறு மூலம் 36 எம்எல்டி தண்ணீர், தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு கிடைக்கும். அதேபோல், முன்பு உள்ள கிணறு மூலம் 23 எம்எல்டி தண்ணீரும் சேர்த்து, தற்போது சுமார் 60 எம்எல்டி தண்ணீர் வர இருக்கிறது.

தட்டுப்பாடு ஏற்படாது:தஞ்சை மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 30 எம்எல்டி தண்ணீர் வந்தாலே போதுமானது. தற்போது இரண்டு மடங்கு தண்ணீர் உள்ளது. மேலும் பல பகுதிகள் மற்றும் 13 ஊராட்சிகளை இணைத்தாலும், தஞ்சாவூர் மாநகராட்சி தண்ணீர் பஞ்சம் இல்லாத அளவிற்கு மாநகராட்சி பணி முன்னெடுத்துள்ளது.

அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத வகையில், மாநகராட்சிப் பகுதிகளில் 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:அறிவுக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு மிக அவசியம் - உலக மனநல நாளில் வலியுறுத்தல்..

ABOUT THE AUTHOR

...view details