தமிழ்நாடு

tamil nadu

400 நாட்களை தாண்டிய கரும்பு விவசாயிகள் போராட்டம்! இடுகாட்டில் கருப்பு கொடி ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 11:29 AM IST

கும்பகோணம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கரும்பு விவசாயிகள், தமிழக அரசையும், தனியார் கரும்பு ஆலை நிர்வாகத்தையும் கண்டித்து, கருப்பு கொடி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரும்பு விவசாயிகள் நூதன போராட்டம்
கரும்பு விவசாயிகள் நூதன போராட்டம்

கரும்பு விவசாயிகள் நூதன போராட்டம்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பாபநாசம் வட்டம், திருமண்டங்குடி கிராமத்தில் செயல்பட்டு வந்த திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை கடந்த 2018ஆம் ஆண்டு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி திடீரென மூடப்பட்டது. இதனால் அரவைக்கு, கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சுமார் நூறு கோடி ரூபாய் அளவிற்கு நிலுவை தொகை வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் விவசாயிகளுக்கு தெரியாமல் பல பொதுத்துறை வங்கிகளில், விவசாயிகள் பெயரில் கடனை பெற்று ஆலை நிர்வாகம் எடுத்துக் கொண்ட தொகை மட்டும் ஏறத்தாழ 300 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து பல விதமான ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் போராட்டங்கள் நடத்தியும் ஆலையின் மீது அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனையடுத்து ஆலையை மற்றொரு தனியார் நிறுவனமான கால்ஸ் நிறுவனம் ஏலத்தில் எடுத்து, கடந்த மாதம் இதன் உற்பத்தியை தொடங்கியது. இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் விவசாயிகள், ஆலை நிர்வாகம் முன்பு தங்கள் நிலுவை தொகையினை வட்டியுடன் வழங்கக் கோரி 415 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும், கரும்பு விவசாயிகள் போராட்டத்தை கண்டு கொள்ளாததால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கின்றனர். வங்கியில் அவர்களது பெயரில் கடன் இருப்பதால், அதனை செலுத்த முடியாத நிலையிலும், வங்கிப் பரிமாற்றம் செய்ய முடியாமலும் தவித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

தற்போது புதிதாக நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டுள்ள கால்ஸ் நிறுவனம், விவசாயத்தை அழித்து, விவசாயிகளை கொல்லும் முடிவை கையில் எடுத்துள்ளதாக கூறியும், விவசாய நிலத்தை சுடுகாடாகக்கும் சூழலை ஏற்படுத்தி வருவதாக கூறி தமிழ்நாடு அரசையும், ஆலை நிர்வாகத்தையும் கண்டித்து கரும்பு விவசாயிகள் கூனஞ்சேரி கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு கருப்பு கொடிகளுடன் ஊர்வலமாக முழக்கங்கள் எழுப்பியபடி சென்று, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஹெல்மட் அணிந்தால் பெட்ரோல் இலவசம்! தஞ்சை போலீசாரின் அதிரடி ஆஃபர்!

ABOUT THE AUTHOR

...view details