தமிழ்நாடு

tamil nadu

காவிரி விவகாரத்தில் தமிழக முதலமைச்சரை அவமதித்தது கண்டிக்கத்தக்கது - தஞ்சாவூரில் சீறிய சீமான்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 5:44 PM IST

Seeman: கர்நாடகாவில், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கான உரிமையை கேட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்து விரும்பத்தகாத செயல்கள் செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் தமிழக முதலமைச்சரை அவமதித்தது கண்டிக்கத்தக்கது - சீமான் காட்டம்
காவிரி விவகாரத்தில் தமிழக முதலமைச்சரை அவமதித்தது கண்டிக்கத்தக்கது - சீமான் காட்டம்

காவிரி விவகாரத்தில் தமிழக முதலமைச்சரை அவமதித்தது கண்டிக்கத்தக்கது - சீமான் காட்டம்

தஞ்சாவூர்: தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்தநாளான இன்று (செப்.27) நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க, கும்பகோணத்திற்கு வருகை தந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கலந்தாய்வு கூட்ட அரங்க மேடையில் மாலையிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஆதித்தனாரின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கர்நாடக மாநிலத்தில், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கான உரிமையை கேட்ட தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் படத்தை வைத்து, விரும்பத்தகாத செயல்கள் செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது மானுட மாண்பு அல்ல. இதே போன்று, சித்தராமையா மற்றும் சிவக்குமார் படங்களை வைத்து நாங்கள் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்.

தமிழர்களுக்கு என்ற ஒரு மாண்பு, பெருந்தன்மை, பேரண்பு உள்ளது. அதற்கு பெயர் கோழைத்தனம், ஏமாளித்தனம் அல்ல. கட்சிக்கு அப்பாற்பட்டு, அவர்களது கொள்கைக்கு அப்பாற்பட்டு, இது ஒட்டு மொத்த தமிழினத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்குமான அவமானமாக கருத வேண்டும். இதனை திமுகவின் கூட்டணி கட்சிகள் கூட கண்டிக்காதது வேதனை.

தேச ஒற்றுமை, இறையாண்மை, ஒருமைப்பாடு என்பதெல்லாம் தமிழனுக்கு மட்டும் தானா? வேறு மாநிலத்தவர்களுக்கு இல்லையா? இது மிகவும் கொடுமையானது” என்று கூறினார். தொடர்ந்து, “தம்பி விஜய்யின் லியோ பட பாடல் வெளியீட்டு விழாவிற்கு, அனுமதி மறுத்து, தமிழக அரசும், காவல்துறையும் நெருக்கடி கொடுத்திருப்பது உள்நோக்கம் கொண்டது. அவர் அரசியல் வருவதை ஒட்டியே இதெல்லாம் நிகழ்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு நிகழ்ச்சியை காரணம் காட்டி காவல்துறையும், அரசும் தப்பித்துக் கொள்ள முடியாது. ஒரு நிகழ்ச்சிக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டியதும், அதனை ஒழுங்குபடுத்துவதற்கும் தான் காவல்துறையும், அரசும். எதையும் செய்ய கூடாது, நடத்தக்கூடாது என்பதற்கு அரசோ, காவல்துறையோ தேவையில்லை.

அப்படி தங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது என்பது உண்மையானால் அதனை பகிரங்கமாகவே அறிவித்து விடுங்கள். இது அரசின் கையால் ஆகாத தனத்தையே காட்டுகிறது. இச்சம்பவம் வருத்தமளிக்கிறது, வன்மையாக கண்டிக்கதக்கது. ஜெயிலர் பட விழாவிற்கு வந்த கூட்டத்தை எப்படி சமாளித்தார்கள், அனுமதித்தார்கள். அரசியல் களத்திற்கு வரவேண்டும் என விஜய் முடிவு செய்து விட்டார்.

எனவே இனி பந்தை இங்கு உள்ளே அழுத்தினால், அங்கு வெளியே வரும். அங்கு அழுத்தினால் இங்கே வெளி வரும்” என்றும் தெரிவித்தார். பின்னர், வருகிற பாராளுமன்ற தேர்தலில், எப்போதும் போல மற்ற கட்சிகள் அனைத்து கூட்டணி அமைத்து, வாக்குகளுக்கு காசு கொடுத்து பேட்டியிடும் என்றும் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல வாக்கிற்கு காசு கொடுக்காமல், தனித்து போட்டியிடும் என்றும் 60 ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சி பிடிக்காதவர்கள் தான் அதனை ஒழிக்க வேண்டும் என விரும்புவர் என்றும் பேசினார்.

அப்போது ஒரு செய்தியாளர், தொகுதிக்கு 3 ஆயிரம் வாக்குகள் மட்டும் பெறும் நீங்கள் எப்படி உங்கள் செல்வாக்கு வளர்ந்தாக சொல்ல முடியும் என கேட்டதால் ஆத்திரமுற்ற சீமான், எந்த தொகுதி என தெரியுமா ? சொல் என்றும் நான் தூத்துக்குடி தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருக்கிறேனே அது தெரியுமா தெரியாதா உனக்கு எனவும் எதிர்கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, திராவிட கட்சிகள் வாக்கிற்கு காசு கொடுக்காமல் வெற்றி பெற்று இருக்கிறார்களா? மனசாட்சியோடு நீங்கள் பதில் சொல்லுங்கள். வாக்குகிற்கு திராவிட கட்சிகள் காசு கொடுக்கவில்லையா? என் செல்வாக்கு வளர்ந்துள்ளதா? சரிந்துள்ளதா? நீங்களே சொல்லுங்கள் என்ற கேள்விக்கு, “எனக்கு வளர்ந்ததாக தெரியவில்லை” என செய்தியாளர் பதிலளிக்க, அப்போ நீ கோமாவில் இருக்கிறாய் ? என சீமான் ஆவேசமாக கூறினார்.

அதற்கும் அவர், “ஆம் நான் கோமாவில் தான் இருக்கிறேன்” என பதிலளிக்கவே கேவமான சீமான், நீ எந்த பத்திரிக்கை என்றும் உங்கள் பத்திரிக்கை அந்த அளவிற்கு கேலவமாகிவிட்டதா என்றும் கேள்வி எழுப்பினார். அதையடுத்து கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருவையாறு ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்சி பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க:சென்னையில் ஐடி நிறுவனங்களில் திடீர் வருமான வரி சோதனை- காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details