தமிழ்நாடு

tamil nadu

ஓடுமா? ஓடாதா? தொமுச - அண்ணா தொழிற்சங்க, சிஐடியூ போஸ்டர் மோதல்; பயணிகள் குழப்பம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 10:31 PM IST

Transport strike issue: திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் நடைபெறும்" என தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியுள்ள நிலையில், கும்பகோணத்தில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் நாளை அரசு பேருந்துகள் ஓடாது எனவும், திமுகவின் சார்பு தொழிற்சங்கமான (தொமுச) தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் வழக்கம் போல் அரசு பேருந்துகள் இயங்கும் என போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர்.

poster-clash-between-citu-and-lpf-passengers-confused-at-kumbakonam
தொமுச - சிஐடியூ போஸ்டர் மோதல்.. ஓடுமா ஓடாதா என பயணிகள் குழப்பம்!

தஞ்சாவூர்: ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் தொழிலாளர்த்துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்றனர். இதில், சுமுக தீர்வு எட்டப்படவில்லை.

இதனால், ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. இதனைத் தொடர்ந்து, இன்று (ஜனவரி 08) போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து நிதித்துறைச் செயலர் உடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை ஆணையம், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையிலான இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதையடுத்து "அரசின் பதிலில் திருப்தி ஏற்படாததால் நாளை திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் நடைபெறும்" என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கும்பகோணத்தில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் நாளை 09ஆம் தேதி அரசு பேருந்துகள் ஓடாது என போஸ்டர்கள் அடித்து ஒட்டியிருக்கின்றனர். அதே வேளையில், திமுகவின் சார்பு தொழிற்சங்கமான (தொமுச) தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் நாளை (ஜன.09) வழக்கம் போல் அரசு பேருந்துகள் இயங்கும் என துண்டு போஸ்டர்கள் ஒட்டியிருக்கின்றனர்.

இந்த இரு வேறு போஸ்டர்களால் பொது மக்களிடையே தற்போது அரசு பேருந்துகள் ஓடுமா? ஓடாதா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை 09ம் தேதி காலை தான் முழுமையாகப் போராட்டம் எந்த அளவிற்கு இருக்கிறது, பேருந்துகள் எந்த அளவிற்கு ஓடுகிறது, ஓடவில்லை என்பது முழுமையாகத் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:திட்டமிட்டபடி நாளை முதல் ஸ்டிரைக் அறிவித்த தொழிற்சங்கங்கள்.. அமைச்சர் சிவசங்கர் ரியாக்‌ஷன் என்ன?

ABOUT THE AUTHOR

...view details