தமிழ்நாடு

tamil nadu

'தஞ்சை அரசு மருத்துவமனைக்கு 2 புதிய இதய சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்படும்' - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

By

Published : Apr 12, 2022, 10:47 PM IST

தஞ்சை அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சை உள்ளிட்ட இரு புதிய பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது என்று சுகாதாரத் துறை மீதான மானியக்கோரிக்கையில் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழ்நாடு சட்டபேரவையில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை:தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று (ஏப்.12)சுகாதாரத்துறை மானியக் கோரிக்கைத் தொடர்பான விவாதம் நடைபெற்றது.அதன்படி, திருவாரூர் தொகுதியில் திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட புலிவலம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு முன் வருமா என்று பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், 'புலிவலம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தற்போது வாய்ப்பில்லை. புலிவலம் ஊராட்சிக்கு அருகே கொரடாச்சேரியில் உள்ள ஜவஹர்லால் நேருவால் அமைக்கப்பட்ட மருத்துவமனையை தற்போது பழையதாகக் காணப்பட்டுள்ளது. அதனை மறுசீரமைப்பு செய்து புதியதாக மாற்றப்படும்' என்று தெரிவித்தார்.

இதய அறுவை சிகிச்சை:இதற்கிடையே மற்றொரு சட்டப்பேரவை உறுப்பினர் வரலட்சுமி, செங்கல்பட்டு மாவட்டத்தில் மண்ணிவாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், 'மத்திய அரசின் வரையறைக்கு உட்பட்டு 8 கி.மீ. தொலைவில் இருந்தால் கட்டாயம் ஆரம்ப சுகாதார அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறினார். மேலும், மற்றொரு சட்டப்பேரவை உறுப்பினர் நீலமேகம், ’தஞ்சையில் இதய அறுவை சிகிச்சை நோயாளிகள் அதிகம் இருப்பதால், அவர்கள் சிகிச்சைக்காக சென்னை மற்றும் திருச்சிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

ஆகவே, தஞ்சை அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்கான வசதியைத் தொடங்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், ’தஞ்சையின் மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இரண்டு முறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தஞ்சை அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சை உள்ளிட்ட இரு புதிய பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது’ எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ.250 கோடி உயர்தர பன்னோக்கு மருத்துவமனை - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details