தமிழ்நாடு

tamil nadu

'அலுங்குறேன் குலுங்குறேன்' - நீச்சல் குளத்தில் கும்பகோணம் கோயில் யானை ஆனந்த குளியல்!

By

Published : Apr 17, 2023, 5:04 PM IST

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான மங்களம் யானை (56) கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிதாக கட்டப்பட்ட நவீன நீச்சல் குளத்தில் கோடை வெப்பம் தணிக்க, இன்று நண்பகல் ஆனந்த குளியலிடும் காட்சியை சுற்றுலாப் பயணிகள் பொது மக்கள் என ஏராளமானோர் திரண்டு நின்று, ஆர்வமாக ரசித்து மகிழ்ந்தனர்.

Etv Bharat
Etv Bharat

நீச்சல் குளத்தில் கும்பகோணம் கோயில் யானை மங்களம் ஆனந்த குளியல்

தஞ்சாவூர்:கும்பகோணம் மங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வரன் திருக்கோயில் பழமையும், பெருமையும் வாய்ந்த சைவத்திருத்தலங்களில் ஒன்றாகும். மகாமகப் பெருவிழா நடைபெறும் பன்னிரெண்டு முக்கிய சைவத் திருத்தலங்களில் முதன்மையான தலமாகவும் இது விளங்குகிறது. இங்கு ஆதி கும்பேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்க, இங்குள்ள தாயார் மங்களாம்பிகை, மந்திரபீடேஸ்வரியாக போற்றப்படுகிறார். இத்தலம் 51 சக்தி பீடங்களில் முதன்மையான சக்தி பீடமாகவும் விளங்குகிறது என்பது மற்றொரு சிறப்பு அம்சமாகும்.

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான மங்களம் என்ற பெண் யானை (56), இக்கோயிலுக்கு 14 வயதில், 1980ஆம் ஆண்டு மறைந்த காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளால் வழங்கப்பட்டு, தற்போது வரை சுமார் 42 ஆண்டு காலமாக இங்கு பராமரிக்கப்பட்டு, கோயில் பூஜை மற்றும் திருவிழாக்காலங்களில் இறைப்பணி செய்து பவனி வருகிறது.

இந்த யானை ஹாயாக குளிக்க வசதியாக, அருகில் இருக்கும் காவிரியாற்றில் தண்ணீர் இல்லாத காலத்தில், திருக்கோயில் வளாகத்திலேயே, கோவையைச் சேர்ந்த எம் அண்ட் சி பிராப்பர்ட்டி டெலவப்மென்ட் பி லிமிடெட் தனியார் நிறுவனத்தின் ரூபாய் 14 லட்சம் நிதியுதவியுடன் கோயில் வளாகத்தில், 70 அடி நீளமும், 30 அகலமும் கொண்ட இடத்தில், வெளிப்பகுதியில் யானை நடைபயிற்சி மேற்கொள்ளவும், உட்புறத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 500 லிட்டர் தண்ணீர் கொள்ளளவும் கொண்ட அழகிய நீச்சல் குளம், 29 அடி நீளம், 29 அடி அகலம், ஐந்து அடி உயரத்தில் குளத்திற்குள் இறங்க சாய்வு தளத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நீச்சல் குளம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, 56 வயதான கோயில் யானை மங்களம் நாள்தோறும் இந்நீச்சல் குளத்தில் ஆனந்தமாக குளிக்கும் வசதி மங்களத்திற்கு புதிய வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இதனை கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த சில நாட்களாக கும்பகோணம் மாநகரில் கடும் வெப்பம் நிலவுவதால், இந்த கோயில் யானை முதன்முறையாக புதிதாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் இன்று நண்பகல் ஆனந்த குளியல் இட்டு சிறு குழந்தைகளைப்போல மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து விளையாடி குதூகலித்து மகிழ்ந்தது.

குளிப்பதற்கு முன் குளத்தில் இறங்க சற்று தயக்கம் காட்டிய மங்களம் யானை, குளிக்கத்தொடங்கியதும் கரையேற மனம் இன்றி குளத்திலேயே நீண்ட நேரம் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தது. யானை ஆனந்தமாக குளியலிடும் காட்சியை கோயிலுக்கு வந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

இன்று முதல் கோடை காலம் முடியும் வரை தினமும் காலை 6.30 மணி முதல் 08.30 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் இப்புதிய நீச்சல் குளத்தில் மங்களம் யானையினை குளிக்க வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'மீனாட்சி கோயில் யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்' - அமைச்சர் பிடிஆர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details