தமிழ்நாடு

tamil nadu

நடக்க முடியாத ஆட்டுக்குட்டியை ’பிளாஸ்டிக் பைப்’ சக்கரக்கால்களுடன் ஓட வைத்த பேரன்பு!

By

Published : Jun 20, 2021, 2:50 PM IST

”இனி ஆட்டுக்குட்டி நடக்காது என்று தெரிந்தவுடன் அதை கசாப்புக் கடைக்கு விற்கச் சொல்லி உறவினர்கள் வற்புறுத்தினர். ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை. தற்போது ஆட்டுக்குட்டி நடக்கிறது, ஓடுகிறது” என சைமன் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

நடக்கவே முடியாத ஆட்டுக்குட்டியை ஓட வைத்த பேரன்பு
நடக்கவே முடியாத ஆட்டுக்குட்டியை ஓட வைத்த பேரன்பு

கும்பகோணத்தைச் சேர்ந்த பிசிஏ பட்டதாரி சைமன். அவர் வளர்த்த ஆட்டுக்குட்டியின் மேல் டூ வீலர் மோதி விபத்துக்குள்ளானதில் அதன் பின் கால்களின் நரம்புகள் துண்டாகி விட்டன. இதையடுத்து ஆட்டுக்குட்டிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், இனி ஆட்டுக்குட்டியால் எழுந்திருக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.

தான் உயிராக நேசித்து வளர்த்த ஆட்டுக்குட்டியின் நிலையை எண்ணி சைமன் மனம் வெதும்பினார். எப்படியாது ஆட்டுக்குட்டியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நடந்து செல்ல வைக்க வேண்டும் என நினைத்து ஆட்டுக்குட்டிக்காகவே பிளாஸ்டிக் பைப் மூலம் வண்டி ஒன்றைத் தயார் செய்துள்ளார்.

காலுடைந்த ஆட்டுக்குட்டியை பராமரிக்கும் இளைஞர் - சிறப்புத் தொகுப்பு
இது குறித்து சைமன் கூறுகையில், "’நான் சிகப்பு நதி குருதிக்கொடை இயக்கம்’ என்ற அமைப்பை நடத்தி ரத்த தானம் செய்து வருகிறேன். மேலும், தமிழ் கூடு என்ற பெயரில் மாலை நேரத்தில் எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒன்று முதல் 10ஆம் வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இலவச வகுப்புகளை நடத்தி வருகிறேன்.
'அந்த மனசு தான் சார் கடவுள்!'
ஆடு, மாடு, நாய், முயல் போன்ற செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறேன். இந்நிலையில் தான் நான் வளர்க்கும் ஆட்டுக் குட்டி டூவிலரில் சிக்கி விபத்துக்குள்ளானது. ஆட்டுக் குட்டியால் இனி நடக்க முடியாது என்று மருத்துவர் கூறியவுடன் உறவினர்கள் அதை கசாப்பு கடைக்கு விற்றிடுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் நான் அதை பொருட்படுத்தவில்லை. அதை எப்படியாவது நடக்க வைக்க வேண்டும் என நினைத்தேன்.

ஆசாரி மூலம் ஆட்டுக்குட்டிக்காக வண்டி ஒன்றை தயார் செய்தேன். நான் ஆட்டின் மேல் வைத்திருந்த பாசத்தை பார்த்து விட்டு அவர் அதற்கான கூலியை வாங்கவில்லை. அந்த வாகனம் பளுவாக இருந்ததால், அதை ஆட்டுக்குட்டியால் சுமக்க முடியவில்லை. பின்பு நண்பரின் யோசனையின் பேரில், பிளாஸ்டிக் பைப்பால் வண்டி ஒன்றை தயார் செய்தேன்.

ஆட்டுக்குட்டிக்கு சக்கர கால்கள்

அதற்காக ஆயிரம் ரூபாய் செலவானது. ஆனால் அவரும் கூலி எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை. தற்போது ஆட்டுக்குட்டியை நடக்க வைத்து விட்டேன். இதில் நான் ஆத்ம திருப்தியை உணர்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தற்போது ஆட்டுக் குட்டி வண்டியை பயன்படுத்தி நடக்கிறது. ஓடுகிறது. அதுவாகவே இரையை தேடிக் கொள்கிறது. அதன் அழகை பார்த்து ரசித்த பலரும் சைமனை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

ABOUT THE AUTHOR

...view details