தமிழ்நாடு

tamil nadu

தேவை இருந்தும் விலை போகாமல் தேங்கிக்கிடக்கும் தென்னங்கன்றுகள்

By

Published : May 14, 2020, 5:54 PM IST

தஞ்சாவூர்: ஊரடங்கு காரணமாக தனியார் தென்னை உற்பத்தியாளர்களிடம் தேங்கிக்கிடக்கும் தென்னங்கன்றுகளை அரசே கொள்முதல் செய்து தங்களுக்கு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேவை இருந்தும் தேங்கிக்கிடக்கும் தென்னங்கன்று
தேவை இருந்தும் தேங்கிக்கிடக்கும் தென்னங்கன்று

தஞ்சை மாவட்டத்தைப் பொருத்தவரை நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்டாலும் நெல் சாகுபடிக்கு ஈடாக தென்னை விவசாயமும் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் கூடுதலாகவே தென்னை விவசாயத்தில் இப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு காரணம் நெல் விவசாயத்தில் இருந்து வரும் வருமானத்தைக் காட்டிலும் தென்னை விவசாயத்தில் கூடுதல் லாபம் கிடைப்பதே.

இந்த நிலையில் கடந்த கஜா புயலின் போது 90 சதவீத தென்னைமரங்கள் வேரோடு சாய்ந்து வீணாகிப் போனது. இதையடுத்து விவசாயிகள் புதிதாக தென்னங்கன்றுகளை நடுவதற்கு விரும்பினர். இந்த சூழ்நிலையில் தென்னங்கன்றுகளின் தேவை அதிகரித்தது.

இதையடுத்து பட்டுக்கோட்டை அருகில் உள்ள வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள அரசு தென்னை ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்யப்படும் தென்னங்கன்றுகளை வாங்க விவசாயிகள் நாடினர். இருந்தும் அங்கு உற்பத்தி அதிகம் இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் தென்னங்கன்றுகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், ஆராய்ச்சி மையத்திற்கு அருகிலேயே சில தனியார் விவசாயிகள் தனிப்பட்ட முறையில் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து ஆராய்ச்சி மையத்தில் நிர்ணயிக்கப்படும் அரசு விலையைவிட சற்று கூடுதலான விலையில் மற்ற விவசாயிகளுக்கு விற்று வந்தனர்.

இதனால் வேறு வழியில்லாமல் விவசாயிகள் இங்கு வந்து தென்னங்கன்றுகளை வாங்கி சென்று நடவு வேலையில் ஈடுபட்டனர். தற்போது ஊரடங்கினால் அதிக தொலைவில் இருந்து தென்னை விவசாயிகள் இங்கு வந்து தென்னங்கன்றுகளை வாங்க முடியாமல் அதிகளவில் உற்பத்தியான தென்னங்கன்றுகள் தேங்கிப்போனது.

ஒரு பக்கம் விவசாயிகளிடம் தென்னங்கன்றுகள் தேவை இருக்கும் நேரத்தில் தென்னங்கன்றுகள் தேங்கிக் கிடப்பது தென்னங்கன்று உற்பத்தி விவசாயிகளிடையே மிகப் பெரிய வேதனையை உருவாக்கியுள்ளது. தேங்கிக்கிடக்கும் தென்னங்கன்றுகளை அரசே கொள்முதல் செய்து நேரடியாக விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று தனியார் தென்னைங்கன்று உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: சீசன் சமயத்தில் வாழ்வாதாரம் இழந்த குற்றால வியாபாரிகள்

ABOUT THE AUTHOR

...view details