தமிழ்நாடு

tamil nadu

நவராத்திரி திருவிழா; சத்திரம் கருப்பூரில் கொலு பொம்மைகள் தயார் செய்யும் பணி தீவிரம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 11:26 AM IST

Navratri 2023: தஞ்சாவூரில் நவராத்திரை விழாவினை முன்னிட்டு கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சத்திரம் கருப்பூரில் கொலு பொம்மைகள் தயார் செய்யும் பணி தீவிரம்!
சத்திரம் கருப்பூரில் கொலு பொம்மைகள் தயார் செய்யும் பணி தீவிரம்!

நவராத்திரி திருவிழா

தஞ்சாவூர்:கும்பகோணத்தில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில், புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் துவங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் கோயில் மற்றும் வீடுகளில் கொலு வைத்து தினமும் பொதுமக்கள் பூஜை வழிபாடு செய்வார்கள்.

கும்பகோணம் மாவட்டம், சத்திரம்கருப்பூர் கிராமத்தில் மூன்று தலைமுறையாக நவராத்திரி கொலு பொம்மைகள் தயார் செய்யும் தொழிலில் ரமேஷ்குமார் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். மண் பொம்மைகள் மற்றும் காகிதக்கூழ் பொம்மைகள் என இரு வகை பொம்மைகள் தயார் செய்த நிலையில், இலகுவாகவும், அதிகம் சேதமடையாமலும், நீண்ட நாட்களுக்குப் பயன்படும் காகிதக்கூழ் பொம்மைகளையே அதிகளவில் விரும்புவதால், தற்போது அவற்றை அதிக அளவில் தயார் செய்து வருகின்றனர்.

பழைய காகிதங்களை கூழாக்கி அதிலிருந்து தயாராகும் பேப்பர் பவுடரை, கிழங்குமாவில் தயாரான பசையில் உரிய பதத்தில் கலந்து, உருவத்தின் அச்சினை பிளாஸ்டோ பாரீஸில் முன் மற்றும் பின் இரு பாகங்களாக உருவாக்கப்பட்ட டையில் வைத்து தனித்தனியாக தயார் செய்து காய வைதது, பின்னர் மீண்டும் பழைய பேப்பர் மற்றும் பசையைக் கொண்டு இரு பாகங்களையும் ஒன்றாக இணைத்து ஒட்டுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, பல வண்ணத்தில் வர்ணங்களை தீட்டி, அழகுப்படுத்தி விற்பனைக்கு அனுப்புகின்றனர். இவர்களிடம் மிக சிறிய பொம்மைகள் ரூ.15 (காய்கறி வகைகள்) முதல் ரூ.20 ஆயிரம் (63 நாயன்மார்கள் செட் - 71 பொம்மைகள் கொண்டது) வரையில், அரை அடி முதல் 4 அடி உயரம் கொண்ட பொம்மைகள் தயார் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான பொம்மைகளாக கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகை, கல்யாண செட், சீமந்தசெட், மதுரை மீனாட்சி அம்மன், ஆதிசங்கரர், காஞ்சி மகாபெரியவர், யசோதை கிருஷ்ணர், ஆண்டாள் ரெங்கமன்னார், பாண்டுரெங்கன், ரகுமாயி, ரிஷப வாகனத்துடன் சிவன் பார்வதி, அன்னபூரணி, கருட வாகனத்தில் பெருமாள், ராமானுஜர், காமதேனு, தியானத்தில் சிவன், கும்பகர்ணன், 7 குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரிய பகவான், பள்ளி கொண்ட பெருமாள், நரசிம்மர்கள், கயிலாயக்காட்சி, நடராஜப்பெருமான், தசாவதாரப்பெருமாள், கும்பகர்ணன், திருபாற்கடலில் அமுது கடைதல், குபேரர், திருவண்ணாமலை அண்ணாமலையார் நந்தி தாண்டவம் உள்ளிட்ட நூற்றுக்கணக்காண புதுவிதமான பொம்மைகள் தயார் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து, பொம்மைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும், அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, மொரீசீயஸ், மாலத்தீவு உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது பொம்மைக்கான தேவைகள் அதிகம் உள்ளதால், அழகுபடுத்த பயன்படுத்தும் வர்ணங்களின் விலை, பொம்மை தயாரிப்பிற்கான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆட்கள் சம்பளமும் கணிசமாக உயர்ந்துள்ளதால், கடந்த ஆண்டை விட பொம்மைகள் விலை 10 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:“தமிழகத்தில் எந்த இடத்திலும் குடிநீர் பிரச்சினைக்கு இடமில்லை” - அமைச்சர் கே.என்.நேரு

ABOUT THE AUTHOR

...view details