தமிழ்நாடு

tamil nadu

கால் விரல்களை மடக்கி நடனம் - சாதனை முயற்சியில் பள்ளி மாணவி!

By

Published : Apr 17, 2023, 7:22 PM IST

கால் விரல்களை மடக்கியபடி நடனம் ஆடி உலக சாதனை புரியும் முயற்சியில் அரசு பள்ளி மாணவியும் அவரது தம்பியும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அது குறித்த சிறிய தொகுப்பைக் காணலாம்..

Etv Bharat
Etv Bharat

கால் விரல்களை மடக்கி நடனம்

தஞ்சாவூர்:நடனம் என்பது பெரும் கலை, நடனத்தில் தனி முத்திரை பதிப்பது என்பது பெரும் முயற்சியாகும், இந்நிலையில் நடனத்தில் தனது இரண்டு கால்களில் உள்ள 10 விரல்களையும் மடக்கி நடனமாடி உலக சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், முழு மூச்சோடு சாதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், பள்ளி மாணவி ரோஷினி (14).

இவர் ஒன்பதாம் வகுப்பு அரசுப் பள்ளியிலும் இவரது தம்பி கோசித்தார்சன்(10) நான்காம் வகுப்பு தனியார் பள்ளியிலும் திருவாரூரில் படித்து வருகின்றனர். இவர்களின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் ஊராகும். தாயார் அமுதாவின் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவி ரோஷினி மற்றும் கோசித்தார்சன் இருவரும் உலக சாதனைப் படைக்க வேண்டும் என்ற முயற்சியில் நம்பிக்கையுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாக நடனம் ஆடும்போது பாதம் தரையில் படியும்படி நடனம் ஆடுவார்கள், மேலை நாடுகளில் குதிகாலில் நடனம் ஆடுவார்கள். ஆனால், கால் விரல்கள் பத்து விரலையும் மடக்கி, நடனம் ஆடுவது என்பது முதன்முறையாக அரிதாக தெரிகிறது. தஞ்சாவூரில் உறவினர்கள் இல்லத்தில் மாணவர்கள் இருவரும் கால் விரல்களை மடக்கி நடனமாடி அசத்தினர். இதனைப் பார்த்த அவரது உறவினர்கள், அவர்களைப் பாராட்டினர்.

தொடர்ந்து பள்ளி மாணவர்கள் இருவரும் கால் விரல்களை மடக்கி நடனம் ஆடும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பரதநாட்டியம், கிராமியப் பாடல்கள் மற்றும் சினிமா பாடல்களுக்கு ஏற்றார் போல் தங்களது கால் விரல்களை மடக்கி நடனமாடி இருவரும் அசத்துகின்றனர். மேலும் பல்வேறு மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

ரோஷினி தான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே இரண்டு கால் விரல்களையும் மடக்கி நடந்து சாதனையும் படைத்துள்ளார். இது குறித்து பள்ளி மாணவி ரோஷினி கூறும்போது, “நான் குழந்தையாக இருக்கும்போதே கால் விரல்களை மடக்கி நடந்து பழகி பயிற்சி பெற்று பின்னர் பரதநாட்டியம் பயின்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கால் விரல்களை மடக்கி நடனம் ஆடி வருகிறேன்.

என்னைப் பார்த்து எனது தம்பியும் நான்கு வயது குழந்தையாக இருக்கும்போதே இதுபோல் கால் விரல்களை மடக்கி நடனம் ஆடி வருகிறான். உலக சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்காக மட்டுமே இந்த முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறோம். இந்த நடனம் ஆடும்போது கால் விரல்களை மடக்கி சிறுவயதிலிருந்தே ஆடுவதால் எனக்கு கால்களில் வலி இருப்பது இல்லை.

இருப்பினும் மருத்துவர்களின் ஆலோசனையின் படி இந்த நடனத்தை ஆடி வருகிறேன். இதுபோல் மற்றவர்கள் இந்த நடனத்தை ஆடும்போது கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்” எனத் தெரிவித்தார். கால் விரல்களை மடக்கி நடனம் ஆடுவது என்பது தமிழ்நாட்டின் புதிய முயற்சியாக உள்ளது. இந்த புதிய சாதனை முயற்சியில் பள்ளி மாணவர்கள் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சங்கூதுவதில் சாதனை படைத்த சாதுக்கள்..! ஒரே நேரத்தில் ஆயிரத்தெட்டு பேர்..

ABOUT THE AUTHOR

...view details