தமிழ்நாடு

tamil nadu

8-ஆம் வகுப்பிலேயே எழுத்தாளர்.. கலைத்துறையில் கலக்கும் அரசு பள்ளி மாணவி மோனிகா!

By

Published : Jul 5, 2023, 9:10 PM IST

தஞ்சையில் இலக்கிய உலகில் சாதனை படைத்து வரும் 8-ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவி மோனிகாவுக்கு ஆசிரியர்கள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கலையில் கலக்கி வரும் அரசு பள்ளி மாணவி
கலையில் கலக்கி வரும் அரசு பள்ளி மாணவி

இளம் கவிஞர் மோனிகாவின் சிறப்பு பேட்டி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா, ஐம்பதுமேல் நகரம் கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவி மோனிகா(13). இவரது அப்பா ரவி, அம்மா உமாதேவி ஆவர். அப்பா விவசாயம் செய்து வரும் நிலையில், மோனிகா அப்பகுதியில் வரகூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

அவரது அண்ணனும் அதே பள்ளியில் பயின்று வருகின்றார். இதனையடுத்து தமிழ் மொழி மேல் கொண்ட பற்று மற்றும் ஆர்வத்தால் கவிதை எழுத தொடங்கியுள்ளார். இந்த ஆர்வத்திற்கு அவரது மாமா பேராசிரியர் ஆறுமுகம், பள்ளி முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார், பள்ளி தலைமையாசிரியை கிருஷ்ணவேணி, மற்றும் தமிழ் ஆசிரியை சுகன்யா, ஆசிரியர் ஆல்பர்ட் ஆகியோர் ஊன்றுகோலாய் இருந்துள்ளனர்.

இதனையடுத்து பள்ளி மாணவி மோனிகா, கவிதை நூலை தாமாகவே எழுதி இரண்டு நூல் படைப்புகளை அரசு விழாக்களில் வெளியிட்டுள்ளார். அதில் கவிச்சிறகுகள் கவிதை தொகுப்பு நூல் மற்றும் சூரியனை தொடாத சூரியகாந்தி என்னும் நூலில் மரபுக் கவிதைகளை எழுதியுள்ளார். கவிஞர் மோனிகா இலக்கிய ஆர்வத்தைக் கடந்து கராத்தே, சிலம்பம், பரதம் ஆகிய திறமைகளிலும் சிறந்து விழங்கியுள்ளார்.

மேலும், இளைய பாரதி, பாரதியார் விருது, கவிச்சூரியன், கவிச்சுடர் விருது, கலை இலக்கிய விருது, பெண்ணிய கவி விருது, இளங்கவி விருது, குறள் நெறி காவலர் விருது, என பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் 50க்கும் மேற்பட்ட பட்டங்களையும், நெதர்லாந்தில் காணொலி மூலம் நடைபெற்ற கவிதை போட்டியில், பங்கேற்று வெற்றி பெற்றதற்காக மரபுமணி, மரபு பாமணி என்ற விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதுகுறித்து கவிஞர் மோனிகா கூறும்போது, கவிச்சிறகுகள் என்ற நூலில் கரோனா, அழிந்து வரும் விவசாயத்தை மீட்டெடுப்பது, அக்கா, அம்மா உறவு முறை, மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் இரண்டாவது நூலாகிய சூரியனைத் தொடாத சூரியகாந்தி என்ற நூலில், முழுவதும் மரபுக் கவிதைகள் எழுதப்பட்டுள்ளது. இந்த கவிதைகள் மரபுக் கவிதையை மீட்டெடுக்கும் வகையில் அது உள்ளது. அதில் தாய் மாமன், மரபு ஆசான், ஆசிரியர்கள், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு, மற்றும் வெளிநாட்டிற்கு சென்ற அப்பாவை பிரிந்த குழந்தைகளின் கவலைகள் ஆகியனவும் இடம் பெற்றுள்ளது. தற்போது மற்றொரு நூல் எழுதி வருவதாகவும் அதில் மாணவர்களின் கற்றல் திறமை, ஜாதி மத பிரிவினை இல்லாமை குறித்து கவிதை எழுதி வருவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி கூறும்போது, அவர்களது பள்ளி மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு வந்ததும், அம்மாணவர்களை பள்ளி காலை வழிபாட்டில், அனைத்து மாணவர்கள் முன்னிலையில் கௌரவப்படுத்தி ஊக்கப்படுத்துவதாகவும், பள்ளி அளவில் மாணவர்களின் திறமைகள், ஆசிரியர்களின் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் மாத இதழ் வெளியிடும் திட்டம் உள்ளது என்றும் அதன் மூலம் மாணவர்களை போட்டிக்கு தயார் செய்வது நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இளம் வயதில் தமிழ் கவிதை எழுதி சாதிக்கும் அரசு பள்ளி மாணவி மோனிகாவு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களின் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:நெகிழியைத் தவிர்க்கும் வகையில், 'மீண்டும் மஞ்சப்பை' திட்ட விழிப்புணர்வு: பெரம்பலூரில் களைகட்டிய மாரத்தான் போட்டி

ABOUT THE AUTHOR

...view details