தமிழ்நாடு

tamil nadu

'நகராட்சி தலைவருக்கும், அதிமுக கவுன்சிலருக்கும் இடையே மோதல்'.. அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

By

Published : May 10, 2023, 4:30 PM IST

செங்கோட்டை நகராட்சியில் நடந்த நகர திட்டக்குழு கூட்டத்தில் நகராட்சி தலைவியும், அதிமுக கவுன்சிலரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat நகர திட்டக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு
Etv Bharat நகர திட்டக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு

நகர திட்டக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு

தென்காசி:செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 24 வார்டு கவுன்சிலர்கள் உள்ள சூழலில், இன்று ( மே 10 ) நகர திட்டக்குழு கூட்டமானது நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு, இன்று நகராட்சி கூட்டரங்கில் நகர திட்டக்குழு கூட்டமானது முதலில் தொடங்கியது.

கூட்டத்தின் ஆரம்பம் முதலே கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தங்கள் வார்டு பகுதியில் கடந்த 3 மாதங்களாக எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை எனவும்; இது குறித்து அதிகாரிகளிடமோ நகராட்சி தலைவியிடமோ புகார் கொடுத்தால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முன் வருவதில்லை எனப்பலர் குற்றம்சாட்டினர்.

அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் பிரச்னை பெரிதாக தொடங்கிய நிலையில் நகராட்சித் தலைவர் திட்டக்குழு கூட்டத்திலிருந்து புறப்பட்டுச்சென்றார். தொடர்ந்து, கூட்டமானது நடைபெற்ற சூழலில் அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் நகராட்சி கூட்டமானது கடந்த மாதமும், இந்த மாதமும் நடைபெறவில்லை எனவும்; இப்படி இருந்தால் மக்களின் குறைகளை எப்படி எடுத்துக் கூறி மக்களுக்கு நல்லது செய்வது என்று கூறி, கவுன்சிலர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நகர்மன்றக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும், தற்போது செங்கோட்டை நகர மன்றத் தலைவியாக உள்ள ராமலக்ஷ்மி என்பவர், சுயேச்சையாக வெற்றி பெற்று முதலில் அதிமுக மற்றும் பாஜகவினர் ஆதரவுடன் சேர்மனாக பதவியேற்ற நிலையில், கடந்த மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

அந்தச் சம்பவம் செங்கோட்டை நகரப் பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த நாள் முதல் இதுவரை நகர்மன்ற கூட்டம் நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், மெஜாரிட்டி இல்லாத ஒரு தலைவர் தற்போது உள்ளார் எனக் கூறி அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டு, கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

தொடர்ந்து, நகர மன்றத்தலைவியின் அறைக்குள் சென்று அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பிரச்னையில் ஈடுபட்ட நிலையில், அதிமுக 3ஆவது வார்டு கவுன்சிலரான சுடர்ஒளி என்பவரை ‘செருப்பால் அடிப்பேன்’ என சேர்மன் கூறியதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, சேர்மன் மற்றும் 3ஆவது வார்டு கவுன்சிலர் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த செங்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஒரே கோரிக்கை.. உடனடி ஆணை.. மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசுவேலை தந்த அமைச்சர் உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details