தமிழ்நாடு

tamil nadu

காட்டாற்று வெள்ளத்தால் நிரம்பிய தென்காசி பத்மநாபேரி குளம்.. பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராமத்தினர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 6:21 PM IST

Tenkasi news: ஊரே வெள்ளத்தில் அடித்துச் சென்றபோதும் நிரம்பாத பத்மநாபேரி குளம், காட்டாற்று வெள்ளத்தில் நிரம்பியுள்ள நிலையில், இதனை ஆவுடையானூர் கிராம மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

avudaiyanoor villagers celebrates the Padmanaberi pond was filled with wild floods
பத்மநாபேரி குளம் காட்டாற்று வெள்ளத்தால் நிரம்பியதால் ஊர் மக்கள் கொண்டாட்டம்

பத்மநாபேரி குளம் காட்டாற்று வெள்ளத்தால் நிரம்பியதால் ஊர் மக்கள் கொண்டாட்டம்

தென்காசி: பாவூர்சத்திரம் அருகே கடையம் செல்லும் சாலையில் ஆவுடையனூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள், சிறு குறு வியாபாரிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த ஊருக்கு மேல்புறம் மற்றும் கீழ்புறம், இரண்டு குளங்கள் அமைந்துள்ளன. இந்த குளங்களை நம்பித்தான் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

இக்குளம் நிரம்புவதன் மூலம், அருகில் இருக்கும் கிணறுகள் நிரம்பி, அதன் மூலம் விவசாயப் பயிர்கள் பாசனம் பெறுகிறது. அதேநேரம் அணைகளில் இருந்தும், ஏரிகள் போன்ற பெரிய நீர் நிலைகளில் இருந்தும் இந்த குளங்களுக்கு நீர்வரத்து வருவதில்லை. இங்கிருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜம்பு நதியில் உள்ள குத்தாலபேரி கால்வாயில் ஏற்படும் காட்டாற்று வெள்ளம் மூலம் சம்பன் குளம், இடையன்குளம், கொல்லன் குளம், குத்தாலபேரி புதுக்குளம், சென்னெல்தா குளம், நாராயணப்பேரி குளம், கைக்கொண்டார் குளம், வெள்ளாளன் புதுக்குளம் ஆகிய குளங்கள் நிரம்பி, தண்ணீர் வந்தால் மட்டுமே ஆவுடையானூரில் உள்ள பத்மநாபேரி குளம் நிரம்பும்.

இந்த ஆவுடையானூரின் மிக அருகில் சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில், ராமநதி அணை மற்றும் அதன் அருகே கடனா அணை ஆகிய அணைகள் அமைந்துள்ளன. இருப்பினும், அணைகளில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட இந்த குளங்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் இந்த குளங்களை நம்பியுள்ள விவசாயிகள், ஆண்டுதோறும் பருவத்தில் விவசாயம் செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி முன்னாள் முதலமைச்சர் காமராஜர் காலத்தில் ஜம்புநதி - ராமநதி அணை இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, ராமநதி அணையின் உபரி நீரை, புது கால்வாய் மூலம் மேற்கண்ட குளங்களுக்கு கொண்டு வருவதே இத்திட்டத்தின் அம்சமாகும். ஆனால் பல்வேறு காரணங்களால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சரான ஜெயலலிதா, 110 விதியின் கீழ் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, முதல் கட்ட நிதியும் ஒதுக்கப்பட்டது. பின்னர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி வேகமாக நடைபெற்ற நிலையில், இத்திட்டம் மூலம் கால்வாய் தோண்டப்படும் இடம் வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வருவதால், வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டி இருந்தது. மேலும், அதில் சில சிக்கல்களும் நீடித்தது.

எனவே, ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் செயல்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான ராம உதயசூரியன், வனத்துறையிடம் அனுமதி பெறுவது முதல் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் பலனாக, சமீபத்தில் வனத்துறையிடம் அனுமதியும் பெறப்பட்டுவிட்டது. இருப்பினும், தற்போது வரை இத்திட்டம் நிறைவேறா நிலையில், இந்த ஆண்டும் போதிய மழை பெய்தும் வழக்கம்போல் குளம் நிரம்பவில்லை.

இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு தென்காசி, நெல்லை, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் கடந்த 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்கள் இடைவிடாமல் கன மழை பெய்தது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் அருவிகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து கடுமையாக உயர்ந்தது.

அதேபோல், நெல்லை மாவட்டத்திலும் பெரும்பாலான அணைகள் அனைத்தும் நிரம்பி, தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த வகையில், தென்காசியிலும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியபோதும், ஆவுடையானூர் பத்மநாபேரி குளம் நிரம்பாததால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மேலும், ஊரே வெள்ளத்தில் அடித்துச் சென்றபோதும், தங்கள் குளம் மட்டும் வழக்கம்போல் நிரம்பவில்லையே என விவசாயிகள் வேதனையோடு இருந்தனர். இந்த சூழ்நிலையில், மழை ஓய்ந்த பிறகு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலிருந்து வடிந்த காட்டாற்று வெள்ளம் மற்றும் பல்வேறு விளை நிலங்களிலிருந்து வடிந்த காட்டாற்று வெள்ளம் காரணமாக, குத்தால பேரி கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதன் காரணமாக குத்தாலபேரி புதுக்குளம் நிரம்பி வழிந்து, அதன் கீழ் உள்ள சம்பன் குளம், இடையன்குளம், கொல்லாலன் குளம், கைக்கொண்டார், வெள்ளாளன், புதுக்குளம் ஆகிய குளங்கள் நிரம்பியதால், அதிலிருந்து பாய்ந்தோடிய தண்ணீர் ஆவுடையானூர் பத்மநாபேரி குளத்தையும் நிரப்பியது. இதன் மூலம் ஒரு வழியாக நேற்று முன்தினம் இரவு குளம் மறுகால் போனது.

மழை ஓய்ந்த நிலையிலும், குளம் நிரம்பப் போவதைக் காண அப்பகுதி இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் இரவிலும் ஆவலோடு குளத்தில் காத்திருந்தனர். பின்னர் குளம் நிரம்பி மறுகால் விழுந்த மறு கனமே, இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் குளத்தின் மதகுப் பகுதியில் பட்டாசுகளை வெடித்து, உற்சாகமாக விசில் பறக்க கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க:கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணி தீவிரம்... நீலகிரியில் களை கட்டும் வியாபாரம்!

ABOUT THE AUTHOR

...view details