தமிழ்நாடு

tamil nadu

உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி.. நெகிழ வைத்த சிவகங்கை சம்பவம்!

By

Published : Jan 22, 2023, 1:02 PM IST

உடல் நலக்குறைவால் உயிரிழந்த கோயில் காளைக்கு கிராமத்தின் மைய பகுதியில் வைத்து மரியாதை செலுத்தியதோடு கும்மி அடித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இறுதி அஞ்சலி
இறுதி அஞ்சலி

இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஒப்பாரி வைத்து கிராம மக்கள் இறுதி அஞ்சலி

சிவகங்கை: வாடிவாசலில் சீறிப்பாயும் ஜல்லிக்கட்டு காளைகள் அனைத்தும் ஒவ்வொரு வீட்டிலும் செல்லப் பிராணியாகவும், குழந்தையாகவும் வளர்க்கப்படுகின்றன. வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படும் காளைகள் யாரிடமும் பிடிபடாமல் வந்தால் அதற்கான மரியாதை அதிகரிக்கும். அதற்காகவே வகை தொகையின்றி காளைக்கு உண்டான செலவுகளைக் கணக்குப் பார்க்காமல் பராமரிப்பாளர்கள் செலவழிக்கின்றனர்.

வாடிவாசலில் மாடுபிடி வீரர்களுக்குச் சவால் விடும் வகையில் காளைகள் நிற்கும் போது அதன் உரிமையாளருக்குக் கோடி ரூபாய் பரிசு விழுந்தது போல் ஒரு மகிழ்ச்சியும், கவுரவமும் கிடைப்பதாகக் கருதப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வைப்பதற்காகவே சிலர் பிரத்யேகமாக காளைகளை வளர்த்தும் தயார் செய்தும் வருகின்றனர்.

தங்களது பொருளாதார செலவுகளை மீறியும், காளைகளுக்காக அதிகளவில் செலவழித்துப் பேணிக் காத்து வருபவர்களை இன்னும் பல்வேறு கிராமங்களில் காணலாம். தங்கள் வீட்டில் ஒருவராக ஜல்லிக்கட்டு காளைகளைக் கருதியும் சிலர் வளர்த்து வருகின்றனர். அதேநேரம் ஜல்லிக்கட்டு காளைகள் உயிரிழந்தால், தங்கள் வீட்டில் ஒருவர் இறந்ததாகக் கருதி, உயிரிழந்த காளைக்கு அனைத்து வித சடங்குகளையும் செய்யும் மாண்பு தமிழர்களுக்கு மட்டுமே உண்டு.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்த மு.சூரக்குடி கிராமத்தில் படைத்தலைவி நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குச் சொந்தமாகக் காளை கடந்த 20 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்தது. சிவகங்கை சுற்றுப்புறத்தில் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளில் களம் காண்ட காளை வெற்றி வாகை சூடி கிராம மக்களுக்குப் பெருமையும் புகழையும் சேர்த்ததோடு இல்லாமல் பல்வேறு பரிசுகளையும் வென்று குவித்து வந்தது.

மேலும் கிராம மக்களின் குலதெய்வமாகக் காளை கருதப்பட்டு வந்த நிலையில், இதை வணங்கி வழிபட்டுத் தொடங்கப்படும் எல்லா காரியங்களும் வெற்றி காரியங்களாக அமைந்ததாக ஊர் மக்கள் தெரிவித்தனர். இத்தகைய பெருமை கொண்ட காளை கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திடீரென காளை உயிரிழந்தது. காளை உயிரிழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் கிராம மக்கள் மனவேதனைக்குள்ளாகினர். ஊரின் மையப்பகுதியில் காளையின் உடல் வைக்கப்பட்ட நிலையில் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காளையின் உடல் முன் கிராம பெண்கள் கும்மியடித்து, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். காளையின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:மதுபோதையில் பஸ் ஸ்டாண்டில் பிரேக் டான்ஸ் - வைரலாகும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details