தமிழ்நாடு

tamil nadu

சிவகங்கை அரசு பள்ளிக்கு ரூ.1.30 கோடி உதவி.. அள்ளிக்கொடுத்த தொழிலதிபருக்கு குவியும் வாழ்த்து!

By

Published : Jul 10, 2023, 4:47 PM IST

Updated : Jul 10, 2023, 9:43 PM IST

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி அருகே உள்ள வாராப்பூர் அரசு பள்ளிக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் நூலகம், 8 வகுப்பறை, அதிநவீன கம்ப்யூட்டர் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்துள்ள தொழிலதிபரும், மருத்துவருமான சேதுராமனின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தான் படித்த பள்ளியை தனது சொந்த செலவில் சீரமைத்துக் கொடுத்த பிரபல தொழில் அதிபர்
தான் படித்த பள்ளியை தனது சொந்த செலவில் சீரமைத்துக் கொடுத்த பிரபல தொழில் அதிபர்

அரசு பள்ளிக்கு ரூ.1.30 கொடி அள்ளிக்கொடுத்த முன்னாள் மாணவர்

சிவகங்கை:உலகம்பட்டி அருகே அமைந்துள்ளது வாராப்பூர். இந்தக் கிராமத்தில் உள்ள பழமையான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர்களின் அடிப்படை வசதிகளான கட்டிடம், போக்குவரத்து, நூலகம் என ஏதும் இல்லாததனால் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் நிலையில் தவித்து வந்துள்ளனர். இதனால் இந்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

பள்ளியின் இந்த நிலையை அறிந்த தொழிலதிபரும், முன்னாள் மாணவருமான டாக்டர்.சேதுராமன், தான் படித்த அரசுப்பள்ளிக்கு உதவிடும் நோக்கிலும், நன்றி தெரிவிக்கும் வகையிலும், 8 வகுப்பறை கட்டிடம், அதிநவீன கணினிகள், நூலகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் செய்து கொடுத்து உள்ளார்.

அந்தப் புதிய கட்டிடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் டாக்டர்.சேதுராமனின் மகனும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் குருசங்கர் உடனிருந்தார். தான் படித்த அரசுப் பள்ளிக்கு தொழில் அதிபர் டாக்டர் சேதுராமன் பள்ளி கட்டிடத்துடன், அனைத்து வசதிகளையும் செய்து தந்ததை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பாராட்டி பேசினார். அதோடு வாராப்பூர் சுற்றுவட்டார மக்களிடையே இந்த செயல் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இது குறித்து பேசிய வாராப்பூர் கிராம மக்கள், "அடிப்படை கட்டமைப்பு வசதிகளின்றி, இந்த தொடக்கப் பள்ளியில் எங்கள் ஊரைச் சேர்ந்த குழந்தைகள் மிகவும் சிரமத்தோடு படித்து வந்தனர். இந்நிலையில் இங்கு பயின்ற எங்கள் ஊரைச் சேர்ந்த டாக்டர் சேதுராமன், பெரும் முயற்சி எடுத்து தனது சொந்த பணத்தில் பள்ளியை சீரமைத்து கொடுத்தது எங்களுக்கு பெருமையாக உள்ளது. நெகிழ்ச்சி நிறைந்த தருணமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. மேலும் தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய பள்ளியாகவும் இதனை உருவாக்கித் தந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தனர்.

இதேபோன்று, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே அமைந்துள்ள மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியை அப்பள்ளியில் பயின்ற ஹெச்.சி.எல்(HCL) நிறுவனத்தின் அதிபர் சிவ நாடார், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு நவீன வசதிகளுடன் பல கோடி ரூபாய் செலவில் சீரமைத்துக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி, அடிப்படை வசதிகள் இன்றி உள்ள அரசுப் பள்ளிகளுக்கு முன்னாள் மாணவர்கள் உதவி செய்தால் அதில் பயிலும் மாணவ- மாணவிகளின் கல்வித் தரம் மேலும் உயரும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:மகளிர் உரிமைத்தொகை திட்டம் பற்றிப் பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை - அமைச்சர் உதயநிதி

Last Updated :Jul 10, 2023, 9:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details