தமிழ்நாடு

tamil nadu

சேலம் பாஜக மகளிர் அணி பிரமுகர் கொலை வழக்கு - ஒருவர் கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 10:53 PM IST

Salem BJP Lady Murder Case: சேலத்தில் மகளின் காதல் திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததாக நினைத்து, அண்ணியை கொலை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

சேலம்: சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ராஜேஸ்வரி, கடந்த செப்.13ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, ராஜேஸ்வரியின் தாயார் வளர்மதி புகார் கொடுத்த நிலையில், காதல் ஜோடியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர், தான் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக ராஜேஸ்வரி தெரிவித்ததைத் தொடர்ந்து, மணமகன் வீட்டாருடன் அவரை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கு முன்பாக கருணாநிதியின் மகள் ராஜேஸ்வரி, அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள பெரியப்பா கண்ணன் இல்லத்திற்கு சென்று வரும்போதுதான் இந்த மோகன்ராஜ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்திற்கு, ராஜேஸ்வரியின் பெரியம்மா சாந்திதான் காரணம் என்று கருணாநிதி நினைத்து ஆத்திரத்தில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. மேலும், சாந்தி சேலம் பாஜக மகளிர் அணியில் பிரமுகராக செயல்பட்டு வந்தார்.

இதனிடையே, தனது மகள் காதல் திருமணம் செய்து கொள்வதற்கு அண்ணி சாந்திதான் காரணம் என்று எண்ணி, சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள சாந்தியின் இல்லத்திற்கு கத்தியுடன் சென்ற கருணாநிதி, இயல்பாக பேசிக் கொண்டிருந்தபோது, கத்தியால் சாந்தியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

இதையும் படிங்க:ஒருதலைக் காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்.. கல்லூரி மாணவி மீது சரமாரி தாக்குதல்! இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு!

இதைத் தொடர்ந்து, சாந்தியின் சகோதரர் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில், அன்னதானப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த கருணாநிதியை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று (செப்.20) அஸ்தம்பட்டி பகுதியில் காவல் துறையினர் கருணாநிதியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் பணியில் தற்போது காவல் துறையினர் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காதல் திருமணம் காரணமாக அண்ணியையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஓரமாக நிற்க சொன்னவரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்; வெளியான சிசிடிவி.. மாணவர்களுக்கு டிசி..

ABOUT THE AUTHOR

...view details