தமிழ்நாடு

tamil nadu

பட்டா நிலத்தை ஆக்கிரமித்ததில் திமுக பிரமுகருக்கு உடந்தை? - பொதுமக்கள் பரபரப்பு புகார்!

By

Published : Jun 8, 2023, 2:59 PM IST

சேலத்தில் தனியார் பள்ளி தலைவருக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததில் திமுக ஒன்றிய செயலாளருக்கு தொடர்பு இருப்பதாக பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பட்டா நிலத்தை ஆக்கிரமித்ததில் திமுக பிரமுகருக்கு உடந்தை? - கண்டுகொள்ளாத காவல் துறை.. சேலத்தில் நடந்தது என்ன?
பட்டா நிலத்தை ஆக்கிரமித்ததில் திமுக பிரமுகருக்கு உடந்தை? - கண்டுகொள்ளாத காவல் துறை.. சேலத்தில் நடந்தது என்ன?

புகார் மனு அளித்த சரவணன் அளித்த பேட்டி

சேலம்: பெரிய கிருஷ்ணாபுரம் மத்தூரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பள்ளிக்கு சரவணன் சேர்மன் பொறுப்பிலும் செயல்பட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல், பள்ளி அருகே சரவணனுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் பட்டா நிலம் உள்ளது.

எனவே சரவணன், தனக்கு சொந்தமான 2 ஏக்கர் பட்டா நிலத்தில் இரும்பு வேலி அமைத்து பாதுகாத்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், சிவகுமார் மற்றும் அய்யன் துரை ஆகியோர் அடி ஆட்களுடன் வந்து, பட்டா நிலத்தில் போடப்பட்டிருந்த வேலியை உடைத்து எறிந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி பொருட்களையும் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, இதனை தட்டிக் கேட்ட சரவணன் மற்றும் அவரின் குடும்பத்தினரை விஜயகுமார் என்பவர், அடியாட்கள் அடங்கிய கும்பல் ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன், இந்த சம்பவம் குறித்து சேலம் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், அவரின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர், சரவணனை மிரட்டி அனுப்பி உள்ளதாக தெரிகிறது. இதனால் விஜயகுமாரின் அடியாட்கள் நாள்தோறும் சரவணனின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வருவதாக பலமுறை காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்துள்ளார்.

ஆனால், காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்காக செயல்பட்டு வந்துள்ளதாக சரவணன் தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம், இந்த மிரட்டல் சம்பவத்திற்கும், நில அபகரிப்புக்கும் பெத்தநாயக்கன்பாளையம் திமுக ஒன்றிய செயலாளர் மாது என்பவர் உடந்தையாக இருப்பதாகவும் சரவணன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று பட்டா நிலத்திற்குள் புகுந்து பாதுகாப்புச் சுவர்களை உடைத்து எறிந்து, அனைத்துப் பொருட்களையும் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரவணன் மற்றும் அவரின் உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர் மனு வழங்கி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சரவணன், “என்னுடைய பெயர் மற்றும் எனது மனைவியின் பெயரில் இந்த நிலம் உள்ளது. 10க்கும் மேற்பட்ட அடியாட்கள் வந்து, நிலத்தில் போடப்பட்டிருந்த வேலியை தகர்த்து, அங்கு இருந்த 3 சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல், அதனை எடுத்துவிட்டு சென்று விட்டனர்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:தருமபுரி அருகே திமுக கவுன்சிலர் மகள் சடலமாக மீட்பு… கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details