தமிழ்நாடு

tamil nadu

Kodanad Case: "கோடநாடு வழக்கில் என் கணவரிடம் எந்த ஆதாரமும் இல்லை" - தனபால் மனைவி பரபரப்பு பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 6:44 PM IST

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, எனது கணவரிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் தனபாலின் மனைவி செந்தாமரைச்செல்வி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

செய்தியாளர்களைச் சந்தித்த தனபால் மனைவி

சேலம்:காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனபாலின் மனைவி செந்தாமரைச்செல்வி இன்று (செப்.07) புகார் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கோடநாடு விவகாரம் குறித்து பேட்டி கொடுக்கவேண்டாம் என்று கூறினேன். அதை எனது கணவர் தனபால் கேட்கவில்லை. பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கூறியதற்காக என்னை அடித்துக் கொடுமைப்படுத்தினார். இதனால் நான் எனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். அங்கு வந்தும் என்னை அடித்தார்.

இதுதொடர்பாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகாரை அவர்கள் வாங்கவில்லை. அதனால் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். கோடநாடு வழக்கு தொடர்பாக எனது கணவர் தனபால் கூறுவது
உண்மையில்லை. யாரோ சொல்லிக் கொடுத்தது போல் பேசிவருகிறார். இது தொடர்பாக வீட்டில் என்னிடம் இதுவரை எதுவும் பேசியதில்லை. ஆனால் தற்போது புதிதாகப் பேசுகிறார்.

ஓட்டுநர் கனகராஜ் இறப்பதற்கு முன்பாக, 6 மாதமாக எனது கணவர் தனபாலும், கனகராஜும் பேசாமல் இருந்தனர். ஆனால், எப்பொழுது இருவரும் பேசிக்கொண்டனர் என்பது குறித்துத் தெரியவில்லை. இவருடன் இருந்தால் என்னைக் கொன்றுவிடுவார்களோ என்று பயமாக உள்ளது. எனவே எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும், எனக்குக் கணவர் தனபால் மூலம் தான் ஆபத்து. எனக்குப் பாதுகாப்பு வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “என்னையோ எனது குழந்தைகளையோ யாரும் வந்து மிரட்ட கிடையாது. இதுவரை எங்கள் வீட்டிற்கு யாரும் வந்ததில்லை. பாதுகாப்பதற்காக வந்த காவல் துறையைப் பார்த்துத் தான் பயமாக உள்ளது. எனது வீட்டிற்குக் கட்சிக்காரர்களோ, மற்றவர்களோ யாரும் வந்தது கிடையாது.

கோடநாடு விவகாரத்தால் எனக்கும், எனது கணவர் தனபாலுக்கும் ஒத்து வரவில்லை என்று புகார் அளித்தேன்; ஆனால் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகாரை எடுத்துக் கொள்ளவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எனது புகார் மீது நடவடிக்கை எடுத்து உரியப் பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:MK Stalin: "உதயநிதி கூறியது குறித்து விவரம் புரியாமல் பிரதமர் மோடி கருத்து" - முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!

ABOUT THE AUTHOR

...view details