தமிழ்நாடு

tamil nadu

மீனவர்கள் விவகாரத்தில் ஸ்டாலினின் விருப்பம் அதுதான்...! - சொல்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்

By

Published : Jul 1, 2021, 3:52 PM IST

Updated : Jul 1, 2021, 4:02 PM IST

இந்திய மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் இந்தியா, இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே முதலமைச்சர் ஸ்டாலினின் விருப்பம் எனத் தமிழ்நாடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம்
மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம்

சேலம்:இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படும் நிகழ்வைத் தடுக்கும் வகையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தடுத்திட வேண்டும் என்பதையே முதலமைச்சர் ஸ்டாலின் விரும்புவதாகவும், அந்த நிகழ்வு விரைவில் நடைபெறும் என்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் கால்நடைப் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்தக் கால்நடைப் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தமிழ்நாடு மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு இன்று ஆய்வுமேற்கொண்டார்.

ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்கா

அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், "உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிலையமாக தலைவாசல் கால்நடைப் பூங்கா உள்ளது. 2022ஆம் ஆண்டில் தலைவாசல் கால்நடைப் பூங்கா பணிகள் முழுமையாக நிறைவடையும். பணிகள் நிறைவடைந்தவுடன் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிலையம் இங்கு செயல்படும்.

இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். புதிய வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் தனிமனிதனாக ஒவ்வொரு நிலையிலும் உயரும் வகையில் மாநில அளவில் கால்நடை வளர்ப்பை இந்தப் பூங்கா மூலம் ஊக்கப்படுத்தப்படும்.

வெளிநாட்டிலிருந்து மாணவர்கள் இங்கு கல்வி பயிலும் வாய்ப்பும் உருவாக்கப்படும். தலைவாசல் ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்கா அமைப்பதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் உடனடியாகப் பூர்த்திசெய்யப்படும்.

மீன்வளத்தினை மேம்படுத்த நடவடிக்கை

பல்லுயிர்ப் பெருக்கம், வெளிநாட்டு மாணவர் சேர்க்கை, ஆய்வாளர்கள் தங்கும் வசதி என அனைத்துப் பணிகளும் ஓராண்டிற்குள் முழு அளவில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும். இங்குள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் 40 மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர். அடுத்த கல்வியாண்டில் அந்த எண்ணிக்கையை 80 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மீன்வளத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்த நிலை மாறி தற்போது ஐந்தாம் இடத்தில் உள்ளது. மீண்டும் முதலிடத்தைப் பிடிக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அண்டை மாநிலமான ஆந்திராவில் மீனவர்கள், உழவர்கள் நன்னீர் மீன் வளர்ப்பினை மேற்கொண்டுவருகின்றனர்.

அதேபோல தமிழ்நாட்டிலும், வயல்களில் நெல்லை விளைவிப்பதுபோல உயர் தொழில்நுட்பம் மூலம் மீன் வளர்ப்பு ஊக்கப்படுத்தப்படும். தற்போது வயல்களில் மீன் வளர்ப்பதற்கு சுற்றுச்சூழல் பிரச்சினை இருப்பதாகக் கூறுவதால் அதற்குத் தீர்வுகண்டு மீன் வளர்ப்பினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனவர்கள் பிரச்சினை

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படும்போது அவர்களைக் காக்க பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உள் துறை அலுவலர்களுடன் பேசி முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துவருகிறார்.

இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றே முதலமைச்சர் ஸ்டாலின் விரும்புகிறார், இந்த நிகழ்வு விரைவில் நடைபெறும். கால்நடைப் பராமரிப்புத் துறை தொடர்பாக புதிய அறிவிப்புகளை வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது முதலமைச்சர் அறிவிப்பார்" என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது கால்நடைத் துறைச் செயலர் ஜவகர், சேலம் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம், சேலம் மக்களவை உறுப்பினர் பார்த்திபன், சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: 'மருத்துவர்கள் நலன் காக்கும் அரசு' - முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated : Jul 1, 2021, 4:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details