தமிழ்நாடு

tamil nadu

குடிநீரையும் விட்டுவைக்காத சாயப்பட்டறை கழிவுநீர்.. கருகிய பயிர்களுடன் விவசாயிகள் கலெக்டரிடம் மனு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 7:56 PM IST

சேலம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டுவரும் சாயப்பட்டறைகளின் கழிவுகளால், நிலத்தடி நீர் மாசு அடைந்து பயிர்கள் கருகியதாகவும், மக்கள் குடிக்கும் குடிநீரிலும் இதன் நச்சுத்தன்மை கலந்துவிட்டதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆகவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சேலம் விவசாயிகள்

சேலம்:சேலம் பகுதியில் சாயப்பட்டறை கழிவுநீரால் கருகிய பயிர்களுடன் இன்று (டிச.14) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள், சாயப்பட்டறைகளை மூடி விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினர்.

சேலம் மாநகரில் இயங்கி வரும் அனுமதி பெறாத நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீர், சுத்திகரிப்பு செய்யாமல் திருமணிமுத்தாற்றில் நேரடியாக விடப்படுகிறது. இதனால் கொண்டலாம்பட்டி, பூலாவரி , உத்தமசோழபுரம், நெய்க்காரப்பட்டி, கொட்ட நத்தன் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.

கழிவுநீர் காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டு விவசாயத்திற்கு தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலைமை உள்ளது. மேலும், பயிரிடப்பட்டுள்ள கால்நடைகளுக்கான தீவனங்களுக்கு நச்சு கலந்த கிணற்று நீரைப் பயன்படுத்தியதால், கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதன்மூலம், அப்பகுதியில் விவசாயம் செய்யமுடியாமலும், கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காமலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்த சாயப்பட்டறை கழிவுகளால் மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீரிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் நோய் தொற்றுக்கு ஆளாவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், இன்று அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கருகிய பயிர்கள் மற்றும் அதற்கு காரணமான மாசடைந்த நீருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

சேலத்தில் அனுமதியின்றி இயங்கும் சாயப்பட்டறைகளைக் கண்காணித்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்கதிர்கள் சேதமடைந்ததால், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முனேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ், 'சேலம் மாநகரில் குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் ஆசிட் கலந்த நச்சு தண்ணீரால் நிலத்தடி நீர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் கண்துடைப்பிற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.

ஆனால், இதற்கு முழுமையான தீர்வைக் கண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாயப்பட்டறை கழிவுகளால் எங்கள் பகுதியில் உள்ள பெரும்பாலான கிணறுகள் மாசடைந்து கழிவுநீராகவே மாறிவிட்டன. அந்த தண்ணீரால் எந்த பயிரையும் விளைவிக்க முடியவில்லை. கால்நடைகளுக்கு தீவனமும் கொடுக்க முடியவில்லை. குடிப்பதற்குக் கூட கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லை.

எல்லாவற்றையும் பெரும் பொருட்செலவு செய்து வெளியில் இருந்து வாங்கி கால்நடைகளுக்கு கொடுக்கிறோம். இது மிகப்பெரிய இழப்பை எங்களுக்கு கொடுத்து வருகிறது. எனவே, இதற்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:தேசிய அளவிலான ஏர் ரைபிள் சாம்பியன்ஸ் போட்டிக்கு ஓசூர் மாணவிகள் தகுதி.. காவல் ஆய்வாளர் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details