தமிழ்நாடு

tamil nadu

சேலம் தூய்மை பணியாளர் கொலை வழக்கு: அண்ணன், தம்பிகள் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 9:22 PM IST

Salem Swachh worker Murder Case: முன் விரோதம் காரணமாக தூய்மை பணியாளரை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன், தம்பிகள் உள்ளிட்ட எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சேலம் தூய்மை பணியாளர் கொலை வழக்கில் அண்ணன், தம்பிகள் உட்பட எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை
சேலம் தூய்மை பணியாளர் கொலை வழக்கில் அண்ணன், தம்பிகள் உட்பட எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை

சேலம்: சேலம் மாநகர் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி. இவருடைய மகன்கள் டெனிபா (35), சிலம்பரசன் (31), திருநாவுக்கரசு (30), ஜீசஸ் (27) குட்டியப்பன் (25) ஆவர். இதில் குட்டியப்பன் என்பவர் கடந்த 2015 பிப்ரவரி 10ஆம் தேதி கிச்சிபாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது, அங்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜான், சாரதி ஆகியோர் வந்துள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இவர்களுக்குள் முன் விரோதமும் இருந்து வந்த நிலையில், ஆத்திரம் அடைந்த அந்த இரண்டு பேரும் குட்டியப்பன் முதுகில் கத்தியால் குத்தியுள்ளனர். பலத்த காயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, தம்பி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அறிந்த அண்ணன்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்துள்ளனர்.

அப்போது, தம்பியை கத்தியால் குத்த காரணம் அதே பகுதியில் வசிக்கும் தூய்மை பணியாளர் விஜயகுமாரின் மகன் சூர்யா என்பது அவர்களுக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து சூர்யாவை தாக்கும் நோக்கில் டெனிபா, சிலம்பரசன், திருநாவுக்கரசு, ஜீசஸ் மற்றும் இவர்களது உறவினர்கள் விக்னேஷ், மார்ட்டின், ஜெயக்குமார், சிவா ஆகிய எட்டு பேரும் சூர்யாவின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அப்போது வீட்டில் சூர்யா இல்லாததால் ஆத்திரம் அடைந்த அந்த எட்டு பேரும், சூர்யாவின் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். அதைத்தொடர்ந்து, சாலையில் நடந்து கொண்டிருந்த அந்த எட்டு பேரும், அந்த வழியாக வந்த சூர்யாவின் தந்தை விஜயகுமாரைக் கண்டு ஆத்திரம் அடைந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து அந்த எட்டு பேரும், கண்ணிமைக்கும் நேரத்தில் விஜயகுமாரை வயிறு உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் குடல் சரிந்து விஜயகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். அப்போது, தாக்குதலை தடுக்க வந்த விஜயகுமாரின் உறவினர்கள் மேரி, கோவிந்தராஜ், கணேசன், ஜான் உள்ளிட்ட ஆறு பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் காயமடைந்த அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தூய்மை பணியாளர் விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சூரியமூர்த்தி மகன்கள் நாலு பேர் மற்றும் உறவினர்கள் நான்கு பேர் உள்பட எட்டு பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் மூன்றில் நடந்து வந்தது.

இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று (அக்.10) தீர்ப்பு கூறப்பட்டது. இதில் துப்புரவு தொழிலாளி விஜயகுமாரை கத்தியால் குத்தி கொலை செய்த டெனிபா, சிலம்பரசன், திருநாவுக்கரசு, ஜீசஸ், விக்னேஷ், மார்ட்டின், ஜெயக்குமார், சிவா ஆகிய எட்டு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், அனைவருக்கும் தலா முப்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி ராமஜெயம் பரபரப்பு தீர்ப்பளித்தார்.

மேலும், வாய்த் தகராறு மற்றும் முன் விரோதம் காரணமாக தூய்மைப் பணியாளர் கொலை வழக்கில் அண்ணன், தம்பிகள் நான்கு பேர் உள்பட எட்டு பேருக்கு சேலம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:மணல் குவாரிகளில் அரங்கேறும் முறைகேடுகள்.. நாமக்கல் மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை!

ABOUT THE AUTHOR

...view details