தமிழ்நாடு

tamil nadu

கரோனா விதிமீறல்: சேலத்தில் ரூ.1.62 கோடி அபராதம் விதிப்பு

By

Published : Apr 28, 2021, 6:40 AM IST

சேலம்: கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை விதிமுறைகளைப் பின்பற்றாத 74 ஆயிரத்து 684 தனி நபர்கள், கடைகள், வணிக நிறுவனங்களிடமிருந்து இதுவரை 1.62 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தெரிவித்துள்ளார்.

Collector raman
Collector raman

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஏப்ரல் 27 ) நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் சி.அ. ராமன் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவருவதை முழுமையாகத் தடுத்திட பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றிட வேண்டும்.

கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளான நபர்கள் தங்கியுள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஆலோசனைக் கூட்டம்

அப்பகுதிகளில் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கும் பணிகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகளின் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாதது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.

மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை அலுவலர்கள், பணியாளர்கள் வலியுறுத்த வேண்டும்.

இது குறித்து ஒலிபெருக்கிகள் மூலமாகவும், தூய்மைக் காவலர்கள், தன்னார்வலர்கள் மூலமாகவும் தொடர்ந்து விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

முகக்கவசம் அணியாதவர்கள் கண்டறியப்பட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து முகக்கவசம் அணியாதவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை விதிமுறைகளைப் பின்பற்றாத 74 ஆயிரத்து 684 தனி நபர்கள், பல்வேறு கடைகள், வணிக நிறுவனங்களிடமிருந்து விதிமீறல்களுக்காக இதுவரை ஒரு கோடியே 62 லட்சத்து 53 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சேலம் மாநகரக் காவல் ஆணையர் சந்தோஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. திவாகர், மாநகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன் உள்பட பல அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details