தமிழ்நாடு

tamil nadu

சேலத்தில் சிதிலமடைந்த அங்கன்வாடி மையம்.. மழலைகளை பாதுகாக்க நடவடிக்கை என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 9:21 PM IST

சேலத்தில் சிதிலமடைந்த நிலையில் இருக்கும் அங்கன்வாடி மைய கட்டடத்தை மாற்றி, புதிய கட்டடம் அமைத்து தர ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

anganvadi centre
சிதிலமடைந்த அங்கன்வாடி மையம்

சிதிலமடைந்த அங்கன்வாடி மையம்

சேலம்: காடையாம்பட்டி வட்டம், தாராபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஊர் கவுண்டன் கொட்டாய் பகுதியில் பழுதடைந்த நிலையில், அங்கன்வாடி மையம் 20 வருடத்திற்கு மேலாக தனியாருக்கு சொந்தமான இடத்தில், இரண்டு சிறிய அறைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையானது ஆஸ்பெட்டாஸ் அட்டையால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தின் சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டும், காற்றோட்டம் இல்லாமலும் வெயில் நேரத்தில் கடுமையான புழுக்கத்திற்கு மத்தியிலும் செயல்பட்டு வருகிறது. மேலும், இங்கு குழந்தைகளுக்கு கழிப்பறை வசதிகள் கூட இல்லாத அவலநிலை உள்ளது. இந்த வகையில் பாதுகாப்பற்ற சூழலில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பாதுகாப்பு இல்லாத அங்கன்வாடி மையத்தை இடம் மாற்றம் செய்து, அரசுக்கு சொந்தமான நிலத்தில் புதிய கட்டடம் அமைத்து பாதுகாப்பான சூழ்நிலையில் செயல்படுத்த வேண்டும் என ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி வார்டு உறுப்பினர் ராஜாமணி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,' நான்கு வருடத்திற்கு மேலாக, இந்த பகுதியில் வார்டு உறுப்பினராக செயல்பட்டு வருவதாகவும், சுமார் ரூ.1000 மாத வாடகையில் 20 வருடத்திற்கு மேலாக தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இரண்டு அறைகள் அமைக்கப்பட்டு ஆஸ்பெட்டாஸ் கூரை கீழே இந்த அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது எனவும், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருவதாகவும், எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை’ எனக் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், ‘வெயில் காலங்களில் புழுக்கம் அதிகமாக இருக்கும் எனவும், காற்றோட்டம் இல்லாத அறை என்பதாலும், இதில் குழந்தைகள் எப்படி படிப்பார்கள்? எனவும், கேள்வி எழுப்பினார். அதே நேரத்தில் மையத்தின் அருகில் விவசாய நிலங்கள் இருப்பதால் மழைக்காலங்களில் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இது குழந்தைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றார்.

மேலும், சுவர்கள் ஆங்காங்கே விரிசல் விட்டு காணப்படுகிறது எனவும், எந்த நேரத்திலும் சரிந்து விழும் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்தார். எனவே உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து குழந்தைகள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் எனவும், புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட வேண்டும்’ என வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில்,' கிராமசபை கூட்டம், பஞ்சாயத்து கூட்டம் உள்ளிட்ட அனைத்திலும் புதிய அங்கன்வாடி கட்டடம் வேண்டும் என்று தீர்மானங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:வேலூரில் யானை தாக்கி பெண் பலி.. நேற்று ஆந்திராவில் இருவரை கொன்ற அதே யானை என தகவல்!

ABOUT THE AUTHOR

...view details