தமிழ்நாடு

tamil nadu

வட மாநிலங்களில் கனமழை எதிரொலி:தமிழ்நாட்டில் 75 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்!

By

Published : Jul 15, 2023, 6:59 PM IST

வட மாநிலங்களில் பெய்யும் கனமழையின் காரணமாக தமிழ்நாட்டில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது என லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.

75 thousand trucks stop in tamilnadu
தமிழ்நாட்டில் 75 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்

சேலம்:தமிழ்நாட்டில்லாரி தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் மற்றும் வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் லாரிகள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ் கூறியதாவது, "75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து தேங்காய், ஜவ்வரிசி, மருந்து தயாரிக்கும் பொருட்கள், தீப்பெட்டி பட்டாசு, ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் அனுப்ப முடியாமல் தேக்கமடைந்துள்ளது.

மேலும், வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய ஆப்பிள், மருந்து தயாரிக்கும் பொருட்கள், இயந்திரங்கள், ஜவுளி உள்ளிட்டவையும் ஆங்காங்கே தேக்கமடைந்துள்ளது. இதனால் பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளதால் ஆயிரக்கணக்கான லாரி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்" என்று கூறினார்.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், டெல்லி ஆகிய வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு 700க்கும் மேற்பட்ட சாலைகள் சேதம் அடைந்தன. இமாச்சலில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இங்கு ரூ.1,132 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் பஞ்சாபின் பல பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பாட்டியாலா மற்றும் தேரா பாஸி ஆகிய பகுதிகளில் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கின. சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால், பல வாகனங்கள் மூழ்கி போக்குவரத்து ஸ்தம்பித்தன. டெல்லியில் கடந்த 9ஆம் தேதி 153 மில்லி மீட்டர் மழை பெய்தது. கடந்த 1982-ம் ஆண்டிலிருந்து டெல்லியில் ஜூலை மாதத்தில் இந்த அளவுக்கு மழை பெய்ததில்லை. தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்ததால், டெல்லி சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது.

வட மாநிலங்களில் பெய்யும் கனமழையின் காரணமாக தமிழ்நாட்டில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார்!

ABOUT THE AUTHOR

...view details