தமிழ்நாடு

tamil nadu

இறுதிச்சடங்கு நிகழ்ந்த ஆசிரியர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை!

By

Published : Mar 2, 2023, 8:32 PM IST

வாலாஜாபேட்டை அருகே உயிரிழந்த ஆசிரியரின் இறுதிச்சடங்கிற்காக உறவினர்கள் வேறு ஊருக்குச் சென்ற நிலையில், அவரது வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இறுதிச்சடங்கு நிகழ்ந்த ஆசிரியர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை!
இறுதிச்சடங்கு நிகழ்ந்த ஆசிரியர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை!

ராணிப்பேட்டை:வாலாஜாபேட்டை அம்மூர் செல்லும் சாலையில் உள்ள மாதவன் பாலா நகரைச் சேர்ந்தவர், பழனி. இவர் வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக, வேலுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி மாலை, அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். எனவே உயிரிழந்த ஆசிரியர் பழனியின் உடல், அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த முத்தரசிகுப்பத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் இறுதிச்சடங்கிற்காக அவரது மனைவி உள்பட வீட்டில் இருந்த உறவினர்கள் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (மார்ச் 1) இரவு வாலாஜாபேட்டையில் இருந்த அவரது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், இது குறித்து காவல் துறையினர் மற்றும் வீட்டின் உரிமையாளர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை காவல் துறையினர், கொள்ளையடிக்கப்பட்டிருந்த வீட்டின் உள்ளே சென்று பார்வையிட்டனர்.

அப்போது வீட்டின் பூஜை அறை மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகள் உள்பட 3.50 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீட்டின் அருகில் உள்ள வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைக்க அடையாளம் தெரியாத நபர்கள் முயற்சி செய்திருப்பதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வாலாஜாபேட்டை காவல் துறையினர், கொள்ளையடித்துச் சென்ற நபர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:பிஎச்டி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதலமைச்சரிடம் சென்ற புகார் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details