தமிழ்நாடு

tamil nadu

அரக்கோணம் - காஞ்சிபுரம் ரயில் மார்க்கத்தில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்.. பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி நகை திருட்டு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 10:19 PM IST

Running Train Robbery: அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் மூதாட்டியை கத்தியால் வெட்டி பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரக்கோணம் - காஞ்சிபுரம் ரயில் மார்க்கத்தில் தொடரும் கொள்ளை சம்பவம்
அரக்கோணம் - காஞ்சிபுரம் ரயில் மார்க்கத்தில் தொடரும் கொள்ளை சம்பவம்

ராணிப்பேட்டை:அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் திருப்பூரைச் சேர்ந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி, அரை சவரன் கம்மல் மற்றும் ஆயிரத்து நூறு ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற வாலிபரை, அரக்கோணம் ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் பகுதி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (69). இவர் இன்று (அக்.30) அதிகாலை அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயிலில், காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர், காமாட்சி அம்மன் கோயில்களை தரிசனம் செய்வதற்காக காஞ்சிபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ரயில் தக்கோலம் ரயில் நிலையம் அருகில் செல்லும் போது, திடீரென 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, லட்சுமி அணிந்திருந்த அரை சவரன் கம்மலைக் கேட்டுள்ளார். அவர் தர மறுத்த நிலையில், அந்த நபர் அவரின் வலது கை மணிக்கட்டில் கத்தியால் வெட்டியுள்ளார்.

இதில் பயந்து போன லட்சுமி, தான் அணிந்திருந்த அரை சவரன் கம்மல் மற்றும் ஆயிரத்து நூறு ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த அந்த நபர், ரயில் தக்கோலம் ஸ்டேஷன் வரும்போது கீழே குதித்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த நிலையில், காயமடைந்த லட்சுமி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், கொள்ளையரின் தாக்குதலுக்கு ஆளான லட்சுமிக்கு, கையில் 8 தையல்கள் போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அரக்கோணம் - காஞ்சிபுரம் ரயில் மார்க்கத்தில் கடந்த 10 நாட்களில், பெண் துணை பி.டி ஓ உட்பட 3 பெண்களிடம், கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இதுவரை அரக்கோணம் ரயில்வே போலீசார் யாரையும் கைது செய்யவில்லை.

குறிப்பாக செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ரயில்வே போலீசார், எல்லை பிரச்சனையை காரணம் காட்டி, குற்றவாளிகளை கைது செய்வதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. மேலும், முன்பு இரவு நேரங்களில் நடந்து வந்த கொள்ளை சம்பவம், இன்று அதிகாலை நேரத்தில் நடந்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:போக்சோ கைதி தப்பி ஓடிய விவகாரம்.. கோவை மத்திய சிறை காவலர்கள் 3 பேர் தற்காலிக பணி நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details