தமிழ்நாடு

tamil nadu

மிக்ஜாம் புயல் பாதிப்பு; ராணிப்பேட்டையிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 9:04 AM IST

Relief goods from Ranipet: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதல் கட்டமாக ரூ.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ராணிப்பேட்டையிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ராணிப்பேட்டையிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள்
தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி

ராணிப்பேட்டையிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சென்னைக்கு சென்றது

ராணிப்பேட்டை: மிக்ஜாம் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் மாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதல் கட்டமாக ரூ.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, ராணிப்பேட்டையிலிருந்து கொண்டு செல்லும் லாரியை, அமைச்சர் காந்தி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் டிசம்பர் 4ஆம் தேதி கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பெய்த தொடர் கனமழையினால் சாலைகள், குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்து, பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

புயல் தாக்கத்தால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டும் வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியும், நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க மாவட்ட நிர்வாகம், மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, பல்வேறு பகுதிகளிலிருந்து அரிசி, கோதுமை, பிஸ்கட், பால், பால் பவுடர், துணி வகைகள், பாய், போர்வை, பழ வகைகள், மெழுகுவர்த்திகள், நாப்கின்ஸ் உள்ளிட்ட ரூ.13 லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் முதற்கட்டமாக, ராணிப்பேட்டையிலிருந்து லாரி வாயிலாக அனுப்பப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் லாரியினை, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

முன்னதாக, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து, மக்களை பாதுகாப்பாக தங்க வைத்து, அவர்களுக்கான உணவு மற்றும் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு பகுதியில் வசிக்கும் மழையால் பாதிக்கப்பட்ட 56 பழங்குடியின குடும்பங்களுக்கு, 25 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, நிவாரண உதவியாக அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட நிர்வாகத்தைச் சார்ந்த அனைத்து துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:மூன்று நாட்களாக முடங்கி கிடக்கும் தென்சென்னை.. இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது?

ABOUT THE AUTHOR

...view details