தமிழ்நாடு

tamil nadu

“திமுக அரசு மது விற்பனை இலக்கை 60 ஆயிரம் கோடியாக மாற்றுவதில் முனைப்பு காட்டுகிறது” - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 1:00 PM IST

Anbumani Ramadoss alleged DMK government: மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி, மது விற்பனையை உயர்த்துவதற்கு முனைப்பு காட்டி வருவதாகவும், நீர்வளத்துறை அமைச்சர் அவர் சார்ந்த மாவட்டத்தில் பாலாற்றில் ஒரு தடுப்பணை கூட கட்டுவதற்கு முன்வரவில்லை எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

Anbumani Ramadoss alleged DMK government is trying to increase the liquor sales to 60 thousand crores
திமுக அரசு மீது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

திமுக அரசு மீது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

ராணிப்பேட்டை:அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி அம்மூர் செல்லும் வழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (நவ.25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னதாக தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமான பாலாற்றில் திமுக ஆட்சியில், நீர் மேலாண்மையை மையப்படுத்தி நீரைத் தேக்கி வைக்க ஒரு அணையைக் கூட கட்டவில்லை. நீர்வளத்துறை அமைச்சராகவும், திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் துரைமுருகன், புதிய அணையைக் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் வெறும் கண்துடைப்புக்காக அணை கட்டும் அறிவிப்பை கூட, தற்போது வரை வெளியிடவில்லை.

தமிழகத்தில் மதுவை ஒழிப்பதாக தேர்தல் வாக்குறுதியளித்த திமுக அரசு, தனது கொள்கைகளை மறந்து விட்டு, மது விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில், டெட்ரா முறையில் விற்பனை செய்ய உள்ளதாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கூறி வருகிறார். கடந்த ஆண்டு 36 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய நிலையில், நடப்பாண்டில் 45 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி வருகின்றது. எதிர்வரும் ஆண்டில் 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது. எனவே, மது ஒழிப்பை திமுக அரசு மறந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் சிப்காட் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும் சம்பவத்தில், நாட்டின் வளர்ச்சிக்கு தொழில் முன்னேற்றம் அடைய சிப்காட் தொழிற்பூங்கா வேண்டும். ஆனால், அதை விளை நிலங்களைக் கையகப்படுத்தி அமைப்பதை பாட்டாளி மக்கள் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும், அங்கிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தரிசு நிலங்களில் அமைக்கலாம் என கூறினார்.

தற்போது வரையில் 42 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் எதிர்வரும் தலைமுறையினர் உணவு, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வாழ்க்கையே சவாலாக மாறும் நிலை ஏற்படும் சூழல் உள்ளதாக எச்சரித்தார்.

சேரி குறித்து நடிகை குஷ்பு பேசிய விவகாரத்தில், உண்மையில் சேரி மக்களுக்காக போராட வேண்டும் என்றால், அது திமுகவை எதிர்த்துதான் போராட வேண்டும் என கூறிய அவர், சேரி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கல்வி, மருத்துவம், கழிப்பறைகள், நல்ல வீடு போன்ற அடிப்படை வசதிகளும் இல்லாமல் வசித்து வருவதாகவும், இவ்வளவு காலம் வரையிலும், எந்த விதமான முன்னேற்றத்தை அடையவும் இல்லை, அதற்காக யாரும் போராட்டங்கள் நடத்தவில்லை என கூறினார்.

டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும், தமிழக அரசு டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

சமீப காலமாக தெருநாய்களின் தொல்லை என்பது அதிகரித்து வருகின்றது. இதனைத் தடுக்க பிரச்னை ஏற்படுவதற்கு முன்பாகவே நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்க வேண்டும், நாய்களைப் பிடித்து தனியாக ஒரு இடத்தை தேர்வு செய்து, அவைகளை வளர்க்கலாம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக இளைஞரணி மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக கே.என்.நேரு நியமனம் - திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details