தமிழ்நாடு

tamil nadu

'N95க்கு இணையான மூலிகை முககவசம்' - பொறியியல் மாணவர் கண்டுபிடிப்பு

By

Published : Jun 14, 2021, 10:54 AM IST

முக கவசம் உயிர் கவசம். ஆனால் ஒரு எல்லைக்கு மேல் முக கவசம் அணிந்தால் மூச்சு மூட்டுகிறது. மூச்சு மூட்டுகிறது என்று முக கவசத்தை கழட்டினால் மூச்சடைத்து இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு முடிவு கண்டுள்ளார் கல்லூரி மாணவர் சஜித்.

பொறியியல் மாணவர் கண்டுபிடிப்பு
பொறியியல் மாணவர் கண்டுபிடிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நாகய்யா செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சஜீத் (19). இவர் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் பி. டெக் இரசாயன பொறியியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

முகக்கவசம் தொடர்ச்சியாக அணிவதால் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படுவதை உணர்ந்த இவர் சுவாச மண்டலத்தில் சிரமம் ஏற்படுத்தாத வகையில் ஆயுர்வேத முறையில் முகக்கவசங்களை தயாரித்து அதில் வெற்றியையும் கண்டுள்ளார்.

இதன் பிரதிபலிப்பாக இவர் தயாரித்த முக கவசம் ஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் பெறுவதற்கான வரையறையின் படி 7.659 பாஸ்கல் ஸ்கொயர் சென்டிமீட்டர் புள்ளிகளை பெற்றுள்ளது. மேலும் இது N95 மாஸ்கிற்கு இணையான புள்ளிகள் ஆகும். மேலும் இது 88.82 விழுக்காடு வைரஸ் எதிர்ப்பு செயல்பாடு கொண்டது எனவும் சான்று பெற்றுள்ளது.

மூலிகை முககவசம் - பொறியியல் மாணவரின் அசத்தில் கண்டுபிடிப்பு

பல புத்தகங்களைப் படித்து மூலிகைகளின் பலன்களை தெரிந்து கொண்டு இறுதியில் அதிமதுரம், சிந்தில் கொடி, விஷ்ணுகிராந்தி, பர்படாகம், புதினா, துளசி, கஸ்தூரி மஞ்சள், கற்பூரம்உள்ளிட்ட 16 வகையான மூலிகைகளை கொண்டு ஆயுர்வேத முகக்கவசத்தை இவர் தயாரித்துள்ளார்.

இவற்றை குறைந்த விலையில் விற்பனை செய்து வரும் அவர், காவலர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் என முன்கள பணியாளர்களுக்கு முக கவசங்களை இலவசமாக வழங்கி வருகிறார். துணியாலான இந்த முகக்கவசத்தில் மூலிகைகள் அடங்கிய சிறு குப்பி முகக்கவசத்தின் மூக்கிற்கு அருகில் வைக்கப்படுகிறது.

இந்த குப்பியில் நிரப்பப்பட்டுள்ள 16 மூலிகைகள் அடங்கிய கலவையை சுவாசிக்கும் போது இருமல், சளி, தொண்டை வலி, உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் ஆகியவை நீங்குவதோடு, புத்துணர்ச்சியோடு இருக்கலாம் என சஜீத் கூறுகிறார். இந்த முகக்கவசத்தை துவைத்து 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

கண்ணுக்கு தெரியாத கிருமி கண்ணா பின்னமாய் பரவும் செய்தி நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. கிருமிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இந்த போரில் முக கவசம்தான் போர்கருவி. இந்த முககவசத்தை சரியான முறையில் தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்து வரும் சஜித்திற்கு நம் பாராட்டுகள்.

இதையும் படிங்க: மாஸ்க் எப்படி எல்லாம் அணியக் கூடாது? - பிரபலங்கள் வெளியிட்ட வீடியோ

ABOUT THE AUTHOR

...view details