தமிழ்நாடு

tamil nadu

"எடப்பாடி பழனிசாமி ஒழிக" பசும்பொன்னில் எதிர்ப்பு கோஷம்.. நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 4:15 PM IST

Thevar Guru Poojai:பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோஷம் எழுப்பியதால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat

தேவர் ஜெயந்தி விழாவில், "எடப்பாடி ஒழிக" என கோஷம் - பசும்பொன்னில் பரபரப்பு

ராமநாதபுரம்: கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் 116 வது ஜெயந்தி விழாவும், 61வது குருபூஜை விழாவும் இன்று (அக்.30) விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினரும், முக்கிய தலைவர்களும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தி விட்டு திரும்பிச் சென்றபோது, அங்கிருந்த சிலர் "எடப்பாடி பழனிசாமி ஒழிக" என்று கோஷம் எழுப்பினர். அத்துடன் அதில் ஒரு நபர் எடப்பாடி பழனிசாமி காரின் மீது செருப்பை தூக்கி எறிந்தார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, செருப்பு எரிந்த இளைஞரை போலீசார் இழுத்துச் சென்றனர். பின்னர், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கார்கள் மீதும் பொதுமக்கள் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்த முற்பட்டனர். இதனால், பசும்பொன்னில் மிகவும் பதட்டமாக காணப்பட்டது. இந்த சம்பத்தால் அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.

முன்னதாக, மறைந்த ஜெயலலிதா இருந்த போது, அவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு தங்க முலாம் பூசப்பட்ட கவசங்களை வழங்கினார். நீதிமன்ற தீர்ப்பின்படி, அதிமுகவின் பெயரில் மதுரை அண்ணாநகர் வங்கி கிளையில் பாதுகாப்பாக இருந்த இந்த தங்க கவசத்தைக் கொண்டுதான் முத்துராமலிங்கத் தேவரின் சிலை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மதுரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்! தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை! பால பணிகளையும் துவக்கி வைத்தார்!

ABOUT THE AUTHOR

...view details