தமிழ்நாடு

tamil nadu

மன்னார் வளைகுடாவில் கோடிக்கணக்கில் தங்கம்! மூன்று நாள் முயற்சியில் மீட்டெடுத்த அதிகாரிகள்

By

Published : Jun 1, 2023, 7:51 PM IST

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்டு கடலில் தூக்கி வீசப்பட்ட 30 கிலோ தங்கத்தை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.

மன்னார் வளைகுடாவில் கோடிக்கணக்கில் தங்கம்
மன்னார் வளைகுடாவில் கோடிக்கணக்கில் தங்கம்

ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து தங்க கடத்தி வரப்படுவதாக இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படையினர் இணைந்து தூத்துக்குடி - ராமநாதபுரம் இடையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மே-30 ஆம் தேதி கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பதிவு எண் எழுதப்படாத பைபர் படகு மணலி தீவு அருகே நிறுத்தப்பட்டிருந்தது. அந்த படகில் இருந்தவர்கள் அதிகாரிகளைக் கண்டதும், படகிலிருந்த 2 பார்சல்களை தூக்கி கடல் வீசினர். இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்த நிலையில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக கடலில் தூக்கி வீசுகின்றனரா என ரோந்தில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

இதனால் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய பைபர் படகை பிடித்து படகில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். படகில் இருந்த வேதாளை முஹமது நாசர், அப்துல் கனி, பாம்பன் ரவி ஆகியோரை இந்திய கடலோர காவல் படையினர் மண்டபத்தில் உள்ள முகாமிற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

இந்த 3 பேரின் தகவலின் அடிப்படையில் வேதாளை அசாருதீன், சாதிக் அலி ஆகியோரை கைது செய்து அவரது வீட்டில் இருந்து 21 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ரோந்தில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் மாட்டாமல் இருப்பதற்காக அவர்கள் கடலில் தூக்கி வீசிய தங்கத்தை மீட்கும் பணியில் மூன்றாவது நாளான இன்று அதிகாரிகள் ஈடுபட்டனர்.

கடலில் வீசிய தங்கத்தை கடலில் மூழ்கி சங்கு எடுக்கும் மீனவர்கள், ஸ்கூபா டைவர்ஸ் உதவியுடன் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படையினர் இன்று தேடி வந்தனர். அப்போது மணலி தீவுக்கும் சிங்கிலி தீவுக்கும் இடையே கடலுக்கு அடியில் பார்சலில் கட்டி வீசப்பட்ட தங்க கட்டிகள் மீட்கப்பட்டது. அதில் 10 கிலோ தங்கம் இருந்ததாக மத்திய வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 3 நாள் சோதனையில் இதுவரை 30 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடலுக்குள் வீசப்பட்ட கடத்தல் தங்கம் மீட்கப்பட்டது குறித்து இந்திய கடலோர காவல் படையின் ட்விட்டர் பக்கத்தில், “மத்திய வருவாய் புலனாய்வுத் துறை உடன் இந்திய கடலோர காவல்படை இணைந்து நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 32 கிலோ 869.7 கிராம் தங்கம் மீட்கப்பட்டு உள்ளது” என தெரிவித்து உள்ளது.

சமீபகாலமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு தங்கம் கடத்தி வரப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும் அவ்வாறு தங்கம் கடத்தி வரும் போது அதிகாரிகளின் சோதனையில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக கடலில் கடத்தல் தங்கத்தை தூக்கி வீசும் சம்பவங்களும் அதிகளவில் நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட இதேபோல் கடத்தி வரப்பட்ட சுமார் 20 கிலோ அளவுள்ள தங்கம் கடலில் வீசப்பட்டு பின்னர் மீட்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: துபாய், கோலாலம்பூரில் இருந்து தங்கம் கடத்தல்.. திருச்சியில் குருவி கைது.. சுங்கத்துறை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details