தமிழ்நாடு

tamil nadu

ஒழுங்காக வேலை செய்யாத நில அளவையருக்கு எதிராக வேப்பங்குடி கிராம சபையில் தீர்மானம்

By

Published : May 1, 2023, 10:12 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், வேப்பங்குடி ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அலட்சியமாக பணியாற்றாமல் உள்ள நில அளவையருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

கிராம சபைக் கூட்டத்தில் நில அளவையருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றம் - ஒழுங்காக பணியாற்றாமல் அலட்சியமாக உள்ளதாக குற்றச்சாட்டு

புதுக்கோட்டை:மே 1ஆம் நாளில் தொழிலாளர் தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் (Grama Sabha Meeting) நடத்தவேண்டும் என தமிழ்நாடு அரசு சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. இதனடிப்படையில், தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடந்தது. அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டம், வேப்பங்குடி ஊராட்சியில் நில அளவையருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

கிராம சபைக் கூட்டங்களில் குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும், நிரந்தர பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட மக்கள் சார்ந்த பிரச்னை குறித்து தீர்மானம் நிறைவேற்றுவார்கள். ஆனால், புதுக்கோட்டை அருகே ஒரு ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தொடர்ந்து பணியில் அலட்சியம் காட்டி வரும் நில அளவையருக்கு எதிராக ஒட்டுமொத்த ஊராட்சியும் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது, அவர்களின் வேதனையை பிரதிபலிப்பாக அமைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடி ஊராட்சியில் இன்று (மே.1) மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் அங்குள்ள அய்யனார் கோயிலில் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபைக் கூட்டத்தில் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் மற்றும் சாலை வசதி குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், வேப்பங்குடி பஞ்சாயத்துக்குட்பட்டப் பகுதிகளில் உள்ள தனிநபர் மற்றும் பஞ்சாயத்துக்குட்பட்ட நிலங்களை நில அளவைத் துறை சார்பில் நிலத்தை அளந்து சர்வே செய்து எல்லைகளைப் பிரிக்க உரிய தொகை செலுத்தியும், மனு அளித்தும், மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருவதாகக் கூறிய பொதுமக்கள் இன்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாகப் புகார் மனு அளித்தனர்.

நில அளவையருக்கு எதிராகத் தீர்மானம்:பொதுமக்கள் ஒருபுறம் புகார் அளிக்க சம்பந்தப்பட்ட ஊராட்சியில் உள்ள அரசு நிலங்களை அளவீடு செய்ய ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் சம்பந்தப்பட்ட நில அளவைரிடம் பணம் செலுத்தி பல மாதங்கள் ஆகியும், அதனைக்கூட அவர் அளந்து கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதனால், ஊராட்சிப் பணிகளும் தாமதமாக நடைபெறுகிறது என்றும் ஊராட்சித் தலைவர் உள்ளிட்டோர் வேதனையோடு அப்போது தெரிவித்தனர்.

இதன் பின்பு, ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நில அளவையரின் செயல்பாட்டைக் கண்டித்து அந்த கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு அலுவலர்கள் அலட்சியமாக செயல்படுவதால் பல்வேறு இன்னலுக்குப் பொதுமக்கள் உள்ளாகி வருகின்றனர் என்ற பொதுவான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்தச் சூழலில் இன்று ஒரு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு நில அளவையருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

நிலத்தை அளந்து தர மனு அளித்து காத்திருக்கும் முத்து என்பவர் செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது, ''புதுக்கோட்டை நகரில் வசிக்கும் தனக்கு, வேப்பங்குடி பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் 3 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நிலத்திற்கு பட்டா போடப்பட்டது. இதன்பின் சம்பந்தப்பட்ட நிலத்தை அளந்து, சர்வே செய்து கல்லை போட்டு நிலத்தை அளந்து தர உரிய தொகை செலுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரும் அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுத்து நில அளவையருக்கு மனுவை அனுப்பி வைத்துவிட்டார்.

ஆனால், நில அளவையர் நிலத்தை அளந்து தர இரண்டரை வருடமாக காலம் தாழ்த்தி வருகிறார். இதனையடுத்து இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், பிரச்னை குறித்து புகார் மனு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் நிலத்தை அளந்து தர கால தாமதப்படுத்தும் நில அளவையருக்கு எதிராக கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது'' என்றார்.

மேலும் இதுகுறித்து வேப்பங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாங்கம் கூறுகையில், ''நில அளவைத் துறையில் மனு அளித்தும் உரிய தொகை செலுத்தியும் இதுவரை எங்களுக்கு நிலத்தை அளந்து தர நில அளவைத் துறை தாமதப்படுத்தி வருகிறது.

மேலும் இன்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில், இரண்டு வருடமாக நிலத்தை அளந்து கொடுக்க மனு அளித்து காத்திருப்பதாக கூறி 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நிலங்கள் மட்டுமின்றி, பஞ்சாயத்துக்குட்பட்ட சாலைகளையும் அளந்து தர நில அளவையர் காலதாமதப்படுத்தி வருகிறார். எனவே, சம்பந்தப்பட்ட நில அளவையரின் செயல்பாட்டைக் கண்டிக்கும் விதமாக இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது'' என்றார்.

இதையும் படிங்க:பிடிஆர் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன்?... சிவி சண்முகம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details