தமிழ்நாடு

tamil nadu

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி: காளை மாடு முட்டியதில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 10:37 PM IST

pudukottai Jallikattu: புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற 2024ம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மாட்டை அழைத்து வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

pudukottai
pudukottai

புதுக்கோட்டை: தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாகவும், அதிக வாடிவாசல்களைக் கொண்ட மாவட்டமாகவும் புதுக்கோட்டை மாவட்டம் திகழ்ந்து வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் 2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது.

காலை 8 மணிக்குத் தொடங்கிய இப்போட்டியைத் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராஜா, சின்னதுரை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

முதலாவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உறுதிமொழி வாசிக்க, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதன் பின்னர் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 571 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக களம் இறக்கப்பட்டது.

இதனைக் களத்திலிருந்த 250 மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் களம் இறங்கி மாடுகளை அடக்கிய காட்சிகளும் அடக்க முயன்ற காட்சிகளும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், மிக்ஸி, குக்கர் உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் ரொக்க பரிசுகளும் விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது.

இந்த போட்டியில், புதுக்கோட்டை மாவட்டம், கைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வத்தின் சாமி காளை களத்தில் நின்று விளையாடி முதல் பரிசை தட்டிச் சென்றது.

இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம், இராயமுண்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் மகன் சுகேந் என்ற மாடுபிடி வீரர் 12 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்தார். அவர்கள் இருவருக்கும் 2 பல்சர் இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் 571 காளைகள் வாடிவாசலில் களம் கண்ட நிலையில்‌, 11 மாடுபிடி வீரர்கள் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.‌

இதில், மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த காளையை அழைத்து வந்திருந்த மருதா (19) என்ற இளைஞர் காளை குத்தி சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜன.11) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்து, உயிரிழப்புகள் ஏற்படாமல் இருந்த நிலையில், 19 வயது வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மைக்ரோசாப்ட்-டுடன் இணையும் தமிழக அரசுப்பள்ளிகள் - கரும்பலகையில் இருந்து செயற்கை நுண்ணறிவுக்கு முன்னேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details